எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 12
கட்கரி- எடப்பாடி: கெமிஸ்ட்ரி!
ஆரா
பாஜகவை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் அவர் தமிழகத்தை கவனிக்கிறாரோ இல்லையோ தன் எதிர்கால நலன் கருதி சேலத்தைக் கவனிக்கிறார்.
அதுபற்றி ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.
தமிழக முதல்வர் ஆவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார். கூவத்தூர் முடிவுக்குப் பின்னர் அவர் முதல்வர் ஆன பின்னரும், நெடுஞ்சாலைத் துறையை வேறு யாரிடமும் கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டார்.
நெடுஞ்சாலைத் துறையில் பழுத்துக் கொட்டும் மரங்கள் இரு பக்கமும் அணி வகுத்து நிற்கும் என்பது அரசியலில் யாவரும் அறிந்ததே. அந்த வகையிலோ என்னவோ நெடுஞ்சாலைத் துறையிலேயே தொடர்ந்து பயணம் செய்கிறார் எடப்பாடி.
தன்னைச் சுற்றியிருக்கும் சிலரிடம் எப்போதாவது மனம் திறந்து பேசும் பழக்கம் எடப்பாடிக்கு உண்டு. அதுவும் சேலம் மாவட்டத்தில் இருக்கும்போதுதான் அப்படியெல்லாம் பேசுவார். சென்னை வந்துவிட்டால் யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்ற குழப்பத்தில் பெரிதாக பேசமாட்டார். ஏன் சிரிக்கக் கூட மாட்டார்.
ஆனால் சேலம் பக்கம் சென்றுவிட்டாலே எடப்பாடி தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் மனம் விட்டுப் பேசுவார். அப்படி மிகச் சமீபத்தில் அதாவது தான் முதல்வர் ஆனதற்குப் பின் ஒருமுறை சேலம் வந்தபோது பகிர்ந்துகொண்டது இதைத்தான்…
‘சேலத்திலும் சரி, சேலம் மாவட்டத்திலும் சரி… எங்கே போனாலும் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரில் பல திட்டப் பலகைகள் தென்படுகின்றன. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியாக இருக்கட்டும். பள்ளிக் கூடங்களாக இருக்கட்டும். பால்வாடிகளாக இருக்கட்டும் எங்கே போனாலும் அவரது பெயர் இருக்கிறது.அவர் காலத்துக்கு அவர் செய்துவிட்டார். என் காலத்தில் நான் செய்ய வேண்டும். அதை விட பெரிதாகச் செய்ய வேண்டும்’ என்பதே எடப்பாடியின் மன் கீ பாத். அதாவது மனதின் குரல்.
அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது சேலத்தைச் சுற்றி நிறைய புறவழிச்சாலைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
வீரபாண்டியார் இருக்கும்போது உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை இருவழிச் சாலை போட்டார்கள். ஆறேழு ஆண்டுகளாக அந்தப் பணி நடந்தது. அதன் பின் எடப்பாடி புதிய புறவ்ழிச்சாலைகளை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். முதல்வராக வந்து ஆறு மாதத்தில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் திட்டத்தை முடித்துவிட்டார். இப்போது சேலத்தைச் சுற்றி பைபாஸ்கள் ஆக இருக்கின்றன. கொஞ்சம் அசந்துவிட்டால் பெங்களூரு கொண்டு விட்டுவிடும் என்/று வேடிக்கையாகச் சொல்கிறார்கள் சேலம் வாசிகள்.
இதுமட்டுமல்ல… சேலத்துக்குள் பாலங்களைக் கட்டுவதிலும் முதல்வரது ஆர்வம் அதி தீவிரமாக இருந்திருக்கிறது. நகரத்துக்குள் ஐந்து ரோடு, நான்கு ரோடு சந்திப்புகளில் மேம்பாலம் என்பதும் சேலம் நகரை பாலம் நகராக மாற்றுவதுமே எடப்பாடியின் நோக்கம்.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி சேலம் சேலம் இரும்பாலை சாலை சந்திப்பு அருகில் புதிய பாலத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசிய பேச்சில் சிலவற்றை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பது நல்லது. ,
“சேலம் வளர்ந்து வருகின்ற நகரம், மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நகரம். ஆகவே மாவட்டத்திற்கு தேவையான பாலங்கள் கொடுத்தால்தான் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு மாநகரமாக உருவாக்க முடியும் என்ற கருத்தினை மறைந்த முதல்வர் அம்மாவிடம் கூறினேன். அதற்கு ரூ.320 கோடி ஒதுக்கித் தந்தார். அதுதான் இன்றைக்கு மிக பிரமாண்டமாய் காட்சியளித்து கொண்டு இருகிறது. அதே போல் ஏ.வி.ஆர் ரவுன்டானவில் இருந்து குரங்கடி சாவடி வரை ஒரு பாலம், திருவாகவுண்டனூர் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டு நானே திறந்து வைத்துள்ளேன். அப்பாலம் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகரத்தின் மையப் பகுதியில் ரயில்கள் செல்லுகின்ற காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதனை தடுக்க செவ்வாய்ப் பேட்டை, முள்ளுவாடி கேட் இரண்டு பாலங்கள் அமைத்துத் தர அம்மாவிடம் கோரிக்கை வைத்தோம். அதனையும் அம்மா நிறைவேற்றி தந்தார். அதேபோல் இன்றைக்கு பழைய சூரமங்கலத்திற்கு செல்வதற்கு ரயில்வே கீழ் பாலம் மறைந்த முதல்வர் அம்மா காலத்திலேயே கட்டி முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது
இப்போது இரும்பாலை பகுதியில் செகோ சர்வுக்கு அதிகமான லாரிகள் சென்று வருவதனால் போக்குவரத்து சூழ்ந்த மையப் பகுதியாக இந்த சாலை சந்திப்பு இருக்கின்ற காரணத்தினால் உயர்மட்ட பாலம் ஒன்று மறைந்த முதல்வர் அம்மா இருக்கின்ற காலத்திலே கேட்டோம். இன்றைக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்த அத்தனை பாலங்களும், நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அம்மாவிடம் கூறி அத்தனை பாலங்களையும் இன்றைக்குக் கொண்டுவந்துள்ளோம்’’ என்று கூறிய முதல்வர் அடுத்துச் சொல்கிறார் கவனியுங்கள்.
“இதனை எதற்காக செல்லுகின்றேன். என்றால் இதுவரை யாரும் கண்டுகொள்ளாத சேலம் மாநகரத்தை அம்மாவின் கவனத்திற்கு எடுத்து சென்றதும் சேலம் மாநகர மக்கள் கோரிக்கையை ஏற்று இவ்வளவு பாலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் நம்கண்முன்னே அடிக்கல் நாட்டி, நாமே திறக்கிறோம். அதுவே மிகபெரிய அதிசயம். வரலாற்று சாதனை, சேலம் மாநகரம் வளர்ந்து வரும் மாநகரம், போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகரமாக உருவாக்கப்படும். இன்றைக்கு இன்னும் ஒரு பாலம் அமைக்கப்படும்போது மேலும் போக்குவரத்து அதிகரிக்கும். ஏனென்றால் இது தேசிய நெடுஞ்சாலை. தினந்தோறும் சென்னை செல்ல கூடிய சாலையாக இருக்கின்ற காரணத்திலே அதிக போக்குவரத்து மிகுந்த சாலை, அதிக கனரக வாகனம் செல்ல கூடிய சாலையாக உள்ளது. எனவே ஒரு புறவழிச்சாலை வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.
மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்திருந்த சமயத்தில், அவரிடம் தெரிவித்த போது உடனடியாக நிறைவேற்றி தருவதாக கூறினார். பொது மக்களுக்கு சாலை வசதி மிகவும் அவசியம். இப்போது இருக்கின்ற வகன போக்குவரத்தை கட்டுப்படுத்த புறவழிச்சாலை அமைக்கப்படும் என்ற உறுதியளித்துள்ள மத்திய அமைச்சர் கட்காரி, சேலம் மாவட்ட மக்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின் சார்பாக மனமாற, உளமாற இந்நிகழ்ச்சியில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
பிரம்மாண்டமாக நவீன வசதி கொண்ட பஸ் போர்ட் நம் சேலத்திற்கு வரவுள்ளது. மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி சென்னையில் இதனை அறிவித்தார்.
மத்திய அமைச்சர் நித்தின் கட்கரிக்கு சேலம் மாவட்ட மக்கள் சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று அந்த விழாவில் மத்திய அமைச்சர் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டே இருந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று சென்னையில் இருந்துகொண்டு நீர் வளத்த்றை அமைச்சர் கட்கரி சொல்கிறார். இது தமிழகம் எங்கும் கொந்தளிப்பை உண்டாக்கியது.
மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிப்ரவரி 26 திங்கள் கிழமையன்று ’தி இந்து’ ஆங்கில நாளிதழ் அலுவலகத்துக்கு வருகை தந்து பத்திரிகையாளர்களோடு கலந்துரையாடினார். அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி, மத்திய அரசு எப்போது மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நிதின் கட்கரியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கட்கரி, ‘’இது மிகப் பெரிய விஷயம். அவ்வளவு எளிதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது எளிதான காரியம் கிடையாது. அது மிகக் கடினமான இலக்கு. இதுவரை மேற்கொண்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்தவன் என்ற பதிவை வைத்துள்ளவன் நான். ஆனால், இந்த காவிரி மேலாண்மை வாரியம் என்பது அதுபோன்றதல்ல. இதுபற்றி நான் எதுவும் உத்தரவாதம் கொடுக்க முடியாது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதை தி இந்து ஆங்கில ஏடு பிரசுரித்தது.
இதே கட்கரிக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற முறையில் தொடர்ந்து நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. நீர் வளத்துறை அமைச்சர் என்ற முறையில் காவிரிப் பிரச்னையில் அழுத்தம் தரத் தயங்கியது அவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருப்பதால்தான்…
நீர் வளத்தில் நீதி செய்யாத கட்கரி, தமிழகத்துக்கு நெடுஞ்சாலைத்துறையில் நீதி செய்துவிட்டாரா என்ன? கட்கரிக்கு இவ்வளவு நன்றிகளை முதல்வர் கொட்டித் தீர்ப்பது ஏன்? எடப்பாடி- கட்கரி கெமிஸ்ட்ரி என்ன?
(லீக் ஆகும்)