”ஓபிஎஸ் உடன் இணைந்ததற்கு எடப்பாடி பதறுகிறார்”: டிடிவி தினகரன்

அரசியல்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை அவருக்கு இருந்திருக்கும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அமமுக கட்சி கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று(மே16) ஏற்றி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் “அமமுக ஆட்சி அதிகாரத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு துரோகம் செய்தபோது அமமுக தொடங்கப்பட்டது.

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அமமுக தொடர்ந்து செயல்படும். இரட்டை இலை சின்னத்தை, குக்கர் சின்னத்தை வைத்து தான் மீட்டெடுக்க முடியும். அமமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 2026 ஆம் ஆண்டு உண்மையான ஜெயலலிதாவின் வாரிசுகள் ஒன்று சேர்வோம்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு டிடிவி ஒரு ஓ.பி.எஸ் இணைந்ததற்கே எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு பதறுகிறார். நானும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ம் நீண்டகால நண்பர்கள்.

இடையே சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்திருந்தோம். இன்று மீண்டும் இணைந்து விட்டோம். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஒய மாட்டோம்.

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயர், 24 மாதங்களில் வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராகவும், திமுக திருந்தி இருக்கும் என்று நினைத்தும் மக்கள் வாக்களித்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகி இருந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கேட்கும் தகுதி பழனிசாமிக்கு இருந்திருக்கும். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அதிமுக வழக்குகளில் தற்போது பழனிசாமி வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் இறுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்பார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என அனைவரும் விருப்பப்பட்டார்கள்.

அதனால் ஓபிஎஸ்-ஐ ராஜினாமா செய்ய சொன்னோம். எனது வேண்டுகோளை ஏற்றே ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை நான் நம்பவில்லையோ என நினைத்து தான் தர்ம யுத்தத்தை துவக்கினார்.

இன்று தீயவர்கள் கையில் இயக்கம் உள்ளதால் என்னுடன் இணைந்துள்ளார். சுய நலத்துக்காக, சுய லாபத்துக்காக நாங்கள் இணையவில்லை.

அம்மாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பது தான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் இருவரும் கட்சியை மீட்ட பின்னர் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விமர்சனம்: குட்நைட்!

கள்ளச்சாராய வழக்கு: முக்கிய சப்ளையரை கைகாட்டிய மரூர் ராஜா

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *