“எடப்பாடி செட்டிங் செய்கிறார்” : குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

Published On:

| By Kavi

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று நேற்று வெளியானது. Edappadi is doing the setting

இந்த வீடியோவை பகிர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவு செய்திருந்தார்.

இந்த வீடியோ தொடர்பாக மின்னம்பலத்தில், டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் விற்பனையா? எடப்பாடி வெளியிட்ட வீடியோ – என்ன நடந்தது? என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் கள்ளக்குறிச்சியில் இருந்துதான் கள்ளச்சாராயம் வாங்கி வந்து டாஸ்மாக்கில் வைத்து வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் சப்ளை செய்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ராஜா அதிமுக அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளர் என தகவல்கள் வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (பிப்ரவரி 6) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பவர் என்பதும் அவருக்கு கள்ள சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜா தான் என்பதும் விசாரணையில் தெரியவந்து அந்த அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செட்டிங் செய்கிறாரோ? Edappadi is doing the setting

கடந்த சில நாட்களாக எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரியவருகிறது; கைது செய்யப்படுகிறார்கள்.

பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே ‘பேட்டர்ன்’தான். ஒரு அஜெண்டாவுடனேயே செயல்பட்டு வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு. ஆனால் சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே அரசை குறை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார்.

ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். Edappadi is doing the setting

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share