எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வசம் செல்வது உறுதியாகி உள்ளது.
கடந்த 2022 ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த பொதுக்குழு செல்லாது என்று பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த செப்டம்பர் மாதம் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
ஆறு மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் இறுதி கட்ட வாதங்கள் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்றன. தீர்ப்புக்காக வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இன்று பிப்ரவரி 23ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என நேற்று உச்ச நீதிமன்ற வழக்கு பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10.30க்கு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வழக்கின் தீர்ப்பை அளித்தார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று இருப்பதால் அந்த பொதுக்குழு செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
–வேந்தன்
பொதுக்குழு தீர்ப்பு : எடப்பாடி கொடுத்த சீக்ரெட் மெசேஜ்!
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!