தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சில வாரங்களாகவே மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து மே 30 ஆம் தேதி மின்னம்பலத்தில் எடப்பாடிக்கு என்ன ஆச்சு என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் முதன் முதலாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மே 29 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக அரசைக் கண்டித்து நடத்திய ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அதேபோல ஜூன் 21 ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற அதிமுகவின் ஆர்பாட்டங்களிலும் எடப்பாடி கலந்துகொள்ளவில்லை. இவ்விரு ஆர்பாட்டங்கள் நடைபெற்றபோதும் அவர் சேலத்தில் தான் இருந்தார். வழக்கமாக இதுபோன்ற ஆர்பாட்டங்களில் ஆர்வமாக கலந்துகொள்வார். ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதாலும் மூட்டு வலி அதிகமாவதாலும் இதுபோன்ற ஆர்பாட்டங்களைத் தவிர்த்துவிடுகிறார் எடப்பாடி.
பொதுச் செயலாளர் ஆகிவிட்டதால் மாவட்டச் செயலாளர்களிடமே இந்த ஆர்பாட்ட பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள் அதிமுகவில் சிலர்.
இதற்கிடையே மே கடைசி வாரத்தில் கோவை சென்று தனியார் ஹோட்டலில் தங்கியபடி, தனியார் ஆர்த்தோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார் எடப்பாடி. அவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த, அதை தள்ளிப் போட்டு வருகிறார் எடப்பாடி.
சேலத்தில் இருந்து சென்னைக்கு வழக்கமாக கார் பயணத்தையே விரும்பும் எடப்பாடி, கடந்த சில பயணங்களாக ரயிலில்தான் வந்து செல்கிறார். மூட்டு வலிதான் காரணம். அதேபோல விமான நிலையத்தில் விமானம் வரை காரில் செல்லும் அனுமதி எடப்பாடிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் மூட்டு வலி காரணமாகத்தான். எடப்பாடி மருத்துவ சிகிச்சை தொடர்பாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள ஆலோசனை நடந்துகொண்டிருப்பதாகவும் சேலம், கோவை அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய நிகழ்ச்சிகள், பயணங்கள் ஆகியவற்றை கடந்த சில வாரங்களாக கணிசமாக குறைத்துக் கொண்ட எடப்பாடி நேற்று எடப்பாடி ஒன்றியத்தில் சில பகுதிகளில் அதிமுக கொடியேற்றி வைத்து உரையாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஓரிரு நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடிக்கு போன் செய்து உடல் நலன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது உதயநிதி ஸ்டாலினும் எடப்பாடியிடம் உடல் நலன் குறித்து விசாரித்திருக்கிறார் என்கிறார்கள் திமுக, அதிமுக வட்டாரங்களில்.
ஆரோக்கியத்தை பற்றி பரஸ்பரம் விசாரித்துக் கொண்ட ஆரோக்கியமான அரசியல் இது!
–வேந்தன்
ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் லஞ்சம்: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ மீது வழக்கு!