என் தகுதியைப் பற்றிப் பேச அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை என்று திமுக எம்.பி.ஆ.ராசா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை விமர்சித்ததாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து இன்று (பிப்ரவரி 9) திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“அதிமுகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாததால் எம்.ஜி.ஆரை பற்றி ஆ.ராசா அவதூறாகப் பேசியிருக்கிறார். ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை.
நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என அவர் உணர வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றிப் பேச ஆ.ராசாவுக்கு தகுதியில்லை” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், “ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. எனக்கு என்ன தகுதி இருக்கிறது, இல்லை என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை.
நான் ஒன்று சொல்கிறேன். உங்கள் கேபினெட்டில் அமைச்சராக இருந்த ஒருவர், தற்போதைய முதலமைச்சரை, கலைஞரை, அவரது குடும்பத்தை என்னென்ன பேசினார். இதனால் அவர் மீது உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் உள்ளன.
அதன்பிறகு ஒரு மாநாடு நடத்தினார்கள். அதில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் முதல்வர் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் கேவலப்படுத்தினார்கள்.
இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நான் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று சவால் விடுத்தார்.
எம்.ஜி.ஆர் முகத்தை வைத்துதான் திமுக ஆட்சிக்கு வந்தது என எடப்பாடி சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,
“அதுவேறு கதை, அதைப் பற்றி தனியாக பேசுகிறேன். வருத்தம் தெரிவித்து எடப்பாடி பதவி விலகினால், நானும் விலகுகிறேன்” என குறிப்பிட்டார் ஆ.ராசா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“பாஜக ஏமாற்றிவிட்டது” – கவனிக்க வைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி
ஈபிள் டவரின் இரும்பில் உருவான ஒலிம்பிக் பதக்கங்கள்… காரணம் என்ன?