பச்சை மையால் பத்து வருஷமாக கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத என்னை பற்றி பேசுவதற்கு தற்குறி எடப்பாடிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
அதிமுகவிற்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) காலை செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவர், “நான் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து 52 ஆண்டு காலம் உழைத்துதான் முதலமைச்சர், பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துருக்கிறேன். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. வேறு ஏதோ வழியில் இவர் பதவி பெற்றுள்ளார். அந்த பதவியை வைத்து இன்று தலை, கால் புரியாமல் அண்ணாமலை ஆடிக் கொண்டிருக்கிறார். மக்களை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரின் ஒரே முதலீடு வாயும், நாக்கும் தான். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டும் பாஜகவுக்கு தேவை. தமிழக பாஜகவின் தலைவராக இருந்து அண்ணாமலை, தமிழகத்திற்கு ஒரு நல்லத்திட்டத்தை கூட கொண்டுவரவில்லை” என்று எடப்பாடி குற்றஞ்சாட்டி பேசியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று மாலை பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக பேசினார்.
அவர், “தமிழ்நாட்டில் மிகப்பெரிய டெண்டர் கட்சியாகவும், கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது?”
என்னை பற்றி காலையில் எடப்பாடி பழனிசாமி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். யாரையோ பிடித்து பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும்? உழைக்காமலே பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும்? அவருக்கு இருப்பது வாயும், நாக்கும் தான். அவர் மைக்கை பார்த்தாலே பொய் பேசுவார் என்று சொல்லியிருக்கிறார். இந்த கருத்துக்கு நான் பதிலடி கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது.
எடப்பாடி அவர்களே, உங்க ஊர் சிலுவம்பாளையத்தில் ஒரு கொலை நடக்கிறது. பங்காளிக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். அதன்பிறகு கைது செய்யப்படாத ஒருவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்து கொண்டார்.
இன்று திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர் அப்போது அதிமுக அமைச்சர். அவர் கையை, காலை பிடித்து அந்த வழக்கை முடித்துவிட்டு, மீண்டும் சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அவர் நீங்கள் தான்.
அதனால் தயவு செய்து எனக்கு நேர்மையை பற்றி, நாணயத்தை பற்றி நீங்க எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். எனக்கு நேர்மை பற்றி சொல்லி தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. கூவத்தூரில் நடந்தது ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வா? அங்கு நடந்தது ஒரு அலங்கோலம். ஒரு புரட்சி தலைவர், புரட்சித் தலைவி நடத்திய கட்சியை கூவத்தூரில் என்ன அநியாயம் செய்தீங்க..
தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, தன்மானமுள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. பச்சை மையால் பத்து வருஷம் கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது.
இது அகந்தை.. 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 4ஆம் இடம் கூட கிடையாது. தூக்கி எறியப்படுவீர்கள்” என அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.
எனக்கு அதிமுகவுக்கும் என்ன பிரச்சனை!
தொடர்ந்து அவர், “எனக்கு அதிமுகவுக்கும் என்ன பிரச்சனை? இங்கு அந்த உண்மையை சொல்கிறேன். 2019 தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கலின் போது பல மாநிலங்களைச் சேர்ந்த கூட்டணி கட்சி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நமது கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு ”அண்ணா நீங்களும் வாருங்கள், போகலாம்” என்று அழைத்தார். அதற்கு அவர், ”தோற்றுப்போகிற மோடிக்காக நான் எதற்கு வாரணாசிக்கு வரவேண்டும்?” என்று கேட்டார்.
என்னுடைய தலைவனை பற்றி அப்படி பேசிய எடப்பாடியை அன்றிலிருந்து எப்போதும் ஒரு கூட்டணிக் கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டது கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், மாசமாசம் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது போல நான் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து நான் வரவில்லை. உண்மை தான். ஆனால் நான் கட்சிக்குள் வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதிலும், மோடியின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளேன்” என்று அண்ணாமலை பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பழுதடைந்த அரசுப் பள்ளி கட்டடங்கள்: அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு!
டாப் 10 நியூஸ் : கிருஷ்ண ஜெயந்தி முதல் தமிழ்த்தென்றல் திரு.வி.க பிறந்த நாள் வரை!