மழைப் பொழிவால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் செல்கிறார்.
தமிழகத்தில் பருவ மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் சென்னை, வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநகரப் பகுதிகள் முதல் கிராமங்கள் வரை மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழகத்திலேயே மிக அதிக மிக கன மழை கடந்த வாரத்தில் பெய்ததால் சீர்காழி சுற்று வட்டாரமே நிலைகுலைந்து போனது.
தமிழக முதல்வர் நேற்று (நவம்பர் 14) கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் மழை சேதத்தைப் பார்வையிட்டு விவசாயிகளையும் மக்களையும் சந்தித்தார்.
அதையடுத்து சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர்.
அதேநேரம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நேற்றே அரசுஅறிவித்தது.

இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளுக்கு நாளை (நவம்பர் 16) செல்ல இருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுகவின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் புவனகிரி எம்.எல்.ஏ.வுமான அருண்மொழி தேவன்,
“கடலூரில் இருந்து டெல்டா வரை மக்கள் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல் அறிந்ததுமே இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களைத் தொடர்புகொண்டு நான் அங்கே மக்களை சந்திக்க வருகிறேன், ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று தெரிவித்தார்.
எங்கள் பொதுச் செயலாளர் வருவதாக திட்டமிட்டிருந்த நாளில் முதல்வர் கடலூர், சீர்காழி பயணம் மேற்கொண்டதால் டெல்டா பயணத்தைத் தள்ளி வைத்தார் எடப்பாடி.
நேற்று சென்னையில் முகலிவாக்கம் சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.
இந்த நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து புறப்படும் எடப்பாடி பழனிசாமி கடலூரில் டிபனை முடித்துவிட்டு அதன் பின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்.
விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குகிறார்” என்று கூறினார்.
டெல்டா பயணம் குறித்து கடலூர் கிழக்கு மாசெ முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன் ஆகியோரிடமும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்திருக்கிறார்.
நாளை வேட்டியை மடித்துக் கொண்டு டெல்டாவில் களமிறங்கப் போகிறார் எடப்பாடி. முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்த அதே ரூட்டில் பயணம் செய்வதோடு கூடுதலாக கிராமங்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
–வணங்காமுடி
அமைச்சர்களுக்கு பாஜக செலவில் சுற்றுலா: அண்ணாமலை
அழைத்தார் எடப்பாடி, சென்றார் நேரு