டிஜிட்டல் திண்ணை:  அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்லும் எடப்பாடி 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  சில முக்கியமான மிஸ்டு கால்கள் இருந்தன. அவற்றுக்கு அழைத்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மார்ச் 23 ஆம் தேதி டெல்லி சென்று  அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். அதன் பிறகு மதுரையில் செய்தியாளர்களிடம் கூட்டணி பற்றி தேசிய தலைமை முடிவெடுக்குமென்றும், நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்’ என்று கூறினார்.  ஆனால் தூத்துக்குடியிலே கூட்டணி என்ற கூண்டை விட்டு பாஜக என்ற கிளி பறக்கும் என்று சொல்லுகிறார்.

இந்த நிலையில் அமித் ஷா- அண்ணாமலை சந்திப்பு  பாஜகவிலும், பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இப்போது வரை கருதப்படுகிற அதிமுகவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபோது கர்நாடக தேர்தல் இணைப் பொறுப்பாளராக சில விஷயங்களை பேசிவிட்டு, தமிழ்நாட்டு நிலவரத்தைப் பற்றி ஒரு ஃபைலை கொடுத்துவிட்டு வந்துள்ளார்.  தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி அணி அமைந்தால் அது கட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக இருக்கும், ஆனாலும் கூட்டணி விஷயத்தில் தலைமையின் முடிவை ஏற்று செயல்படுவோம் என்று சொல்லியுள்ளார் அண்ணாமலை.  அப்போது அமித் ஷா, ‘மீண்டும் நாம் சந்திப்போம்.  பொது இடங்களில் கவனமாக பேசுங்கள், கூட்டணிக் கட்சிகளை புண்படுத்தாமல் பேசுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆக அமித் ஷாவை சந்திக்க அண்ணாமலை மீண்டும் டெல்லிக்கு செல்ல இருக்கிறார் என்கிறார்கள் தமிழக பாஜகவினர். அதேநேரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித் ஷாவையும், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். அண்ணாமலை அதிமுகவை எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்தாலும்  தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ் நிலைக்கு  பாஜகவுடனான கூட்டணி தேவை என்று கருதுகிறார் எடப்பாடி. மேலும் இங்கே திமுக தனக்கு எதிராக இருக்கும் நிலையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவுடனான உறவை தானாகவே முன் வந்து உதறிவிட எடப்பாடி தயாராக இல்லை. உட்கட்சி ரீதியிலான பிரச்சினைகளில் பாஜகவின் மேலிட தயவும் எடப்பாடிக்குத் தேவையாக இருக்கிறது.

மேலும் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக அமமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தலைமையில் ஓர் அணியை கட்ட தயாராகி வருவதாகவும் எடப்பாடிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும்  வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி என்பதில் அண்ணாமலை அதிகபட்ச உறுதியோடு இருப்பதாகவும் இதற்காக டெல்லி மேலிடப் பொறுப்பாளர்களை கன்வின்ஸ் செய்ய தொடங்கிவிட்டதாகவும் எடப்பாடிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில்தான்…  அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்யவும், அண்ணாமலையை இணக்கமாக நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தவும் டெல்லி செல்ல இருக்கிறார் எடப்பாடி.  இதற்காக அமித் ஷாவிடமும், நட்டாவிடமும் நேரம் கேட்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்றும் சொல்கிறார்கள்  அதிமுக வட்டாரத்தில். எடப்பாடி டெல்லி சென்று அமித் ஷாவையும், நட்டாவையும் சந்தித்த பின்னர் கூட்டணியில் அடுத்த திருப்பம் ஏற்படும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மெரினாவில் வயலின் வாசித்த இளைஞர்… தேடி வந்த காவல்துறை!

கடலின் குரலோடு மோடியின் மனதின் குரல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *