பொதுச் செயலாளர் ஆனதும் எடப்பாடி பங்கேற்ற முதல் நிகழ்ச்சி!
அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக இன்று (மார்ச் 31) முதல் நிகழ்ச்சியிலே கலந்துகொண்டார்.
அதிமுகவின் மூத்த முன்னோடி தலைவரான எஸ்.டி.சோமசுந்தரத்தின் நூற்றாண்டு தொடக்கவிழா, அவரது சிலை திறப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்த விழாவில் பேசிய எடப்பாடி, “இந்த நிகழ்ச்சிக்கு நான் ஒப்புதல் கொடுத்தபோது நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் இறைவனின் வரம் போல பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சி ஐயா எஸ்டிஎஸ் நூற்றாண்டு விழா என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. இங்கே இருக்கிற தலைவர்கள் எல்லாம் அண்ணா, எம்ஜிஆர், அம்மா ஆகியோரோடு பழகியவர்கள், அரசியல் செய்தவர்கள்.
முப்பெரும் தலைவர்களோடு பழகிய பெரியவர்களின் ஆசியோடு நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.
எம்ஜிஆரை திமுகவில் இருந்து திட்டமிட்டு சதி செய்து கருணாநிதி நீக்கியபோது அவருக்கு உற்ற துணையாக தோளோடு தோளாக நின்றவர்களில் முதன்மையானவர் எஸ்டிஎஸ்,. இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதிலும் முக்கிய பங்காற்றியவர் எஸ்டிஎஸ்” என்று எஸ்டிஎஸ் பற்றி பேசிய எடப்பாடி தொடர்ந்து,
”எனக்கு 19 வயதாக இருந்தபோது எம்ஜிஆரின் ரசிகரான விசுவாசியாக இருந்து சிலுவம்பாளையத்தில் கழகத்தின் கிளைச் செயலாளராக ஆனேன். 34 வயதிலே சேவல் சின்னத்திலே அம்மாவின் அன்பை பெற்று எடப்பாடியில் நின்று வெற்றி பெற்றேன்
இன்றைக்கு எல்லாரிடத்திலும் ஓரளவு பொருளாதாரம் இருக்கிறது. அன்று அப்படி கிடையாது. அப்படிப்பட்ட காலத்திலே அரசியலிலே இறங்கி மக்களுக்காக சேவை செய்தவர்கள் எல்லாம் இந்த மேடையிலே இருக்கிறார்கள்.
சரித்திரம் படைத்த நன்னாளில் இந்த எஸ்டிஎஸ் சிலையை திறப்பதிலும், அவரது நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொள்வதை இறைவன் கொடுத்த வரமாக நான் பார்க்கிறேன்.
சாதாரணமானவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர முடியும் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு முன்னர் மிட்டா மிராசு, ஜமீன் தார்கள், தொழிலதிபர்கள்தான் அரசியலுக்கு வர முடியும். எம்.எல்.ஏ., எம்பி, அமைச்சர், முதலமைச்சர் ஆக முடியும். ஆனால் அண்ணாவின் வழியிலே எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாரிசுகளாக நாம் இந்த நிலைக்கு முன்னேறியிருக்கிறோம்.
இன்றைக்கு பிற்பட்ட சமுதாயம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு நமது திராவிட தலைவர்கள்தான் அடித்தளமாக விளங்கினார்கள். அண்ணா போட்ட விதைதான் ஆலமரமாக வளர்ந்து இன்று மக்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பொதுச் செயலாளர் என்ற போர்வாள் என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஹண்டே சொன்னார். அந்த போர்வாள் மூலமாக கழகத்தையும் காப்போம், மக்களையும் காப்போம்” என்று பேசினார் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த விழாவில் அதிமுகவின் ஆரம்பகால தலைவரான டாக்டர் ஹண்டே, நெடுமாறன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விஐடி பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி. நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எஸ்.டி.சோமசுந்தரத்தின் மகன்கள் எஸ்.டி.எஸ், துரைமாணிக்கம், எஸ்.டி.எஸ். செல்வம் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
–ஆரா
பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்!
பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. : தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!