வைஃபை ஆன் செய்தவுடன் ஈரோடு கிழக்கு கள காட்சிகள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தீவிர பயணத்தை ஈரோட்டில் தொடங்கி இருக்கிறார்.
முழுக்க முழுக்க வேன் மூலமாகவே தொகுதி முழுவதும் சுற்றிவர திட்டமிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிப்ரவரி 15ஆம் தேதி வேன் பிரச்சாரத்தின் போது ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன எடப்பாடி, ‘நீ ஆம்பளையா இருந்தா நீ வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா அவங்களை வெளியே விடு’ என்று திமுகவினரை நோக்கி சீறிப் பாய்ந்தார்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமி இவ்வளவு சீறுவதற்கு என்ன காரணம்… ஈரோடு கிழக்கு களத்தில் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தை ஒட்டி பிப்ரவரி 15ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய ஈரோடு மாநகரின் டிராபிக் நெருக்கடி இரவு 12 மணி வரை நீடித்தது.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஈரோடு நகரத்தை நோக்கி படையெடுத்தன. சங்ககிரி, கோபி, குமாரபாளையம் பகுதியில் இருந்து அதிக வாகனங்கள் எடப்பாடி பழனிசாமியின் ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்துக்காக ஈரோடு நகருக்குள் வந்தன.
ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் ஒவ்வொரு புதிய உத்தியை அரசியல் கட்சிகள் நடைமுறைப்படுத்தும். இந்த முறை திமுக தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுக தேர்தல் பணியை கூட முழுமையாக செய்ய முடியாத அளவுக்கு விளிம்பு நிலை வாக்காளர்களை தன் வசப்படுத்தி விட்டது.
தேர்தல் என்றால் வாக்குப்பதிவு நடக்கும் நாள் மட்டுமல்ல… அதற்கு 20 நாட்கள் 30 நாட்கள் முன்பு தொடங்கி நடக்கும் பிரச்சாரப் பணிகள் மற்றும் களப்பணிகள் ஆகியவை அடங்கும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியை ஜனவரி 18ஆம் தேதி அறிவித்தது தேர்தல் ஆணையம். 19ஆம் தேதியே திமுக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி தேர்தல் பணியை தொடங்கி விட்டார். சீனியர் அமைச்சர்களான நேரு உள்ளிட்டோர் உடனடியாக ஈரோட்டுக்கு வந்து இறங்கினார்கள்.
வழக்கமாக வேட்பாளர் அறிவிப்பில் சோம்பேறித்தனம் காட்டும் காங்கிரஸ் கட்சி 22ஆம் தேதியே ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் வேட்பாளர் என்று அறிவித்து விட்டது. அவ்வளவுதான்… திமுகவில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அமைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் ஈரோட்டில் ஜனவரி கடைசி வாரத்திலேயே குவிந்துவிட்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.
வேட்பாளரோடு சென்று ஓட்டு கேட்பது, தேர்தல் பணிமனைகளில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வது, பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்வது போன்ற பணிகளுக்கு விளிம்பு நிலை வாக்காளர்களை தான் எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன.
பணக்காரர்கள், அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் மிடில் கிளாஸ் வாழ்க்கை தரத்தில் உள்ளவர்கள் இந்த பணிகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களாக இருக்கும் விளிம்பு நிலை வாக்காளர்களை தான் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது களப்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்த வகையில் ஜனவரி 19ஆம் தேதியே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட திமுக ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட பெரும்பாலான விளிம்பு நிலை வாக்காளர்களை தன் வசப்படுத்தி விட்டது. தினமும் 200 ரூபாய் என்று முதல் வாரத்திலும், அதன் பிறகு தினமும் 300 ரூபாய் என்று இரண்டாவது வாரத்திலும், அதன் பிறகு தினமும் 500 ரூபாய் என்று மூன்றாவது வாரமாக இப்போது விளிம்பு நிலை வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி தன் பக்கம் வைத்திருக்கிறது திமுக.
அதிமுகவோ தனது உட்கட்சி பஞ்சாயத்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று உச்ச நீதிமன்றம் வரைக்கும் போய் தென்னரசு வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கே வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி பிப்ரவரி 7 ஆகிவிட்டது.
அதன்பிறகு அதிமுக தேர்தல் பணிகளை வேக வேகமாக தொடங்கிய நிலையில் திமுகவோ சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே தீவிர தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருந்தது. இதனால்தான் உறுதியான அதிமுக தொண்டர்களை தவிர மற்ற விளிம்பு நிலை வாக்காளர்கள் அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்ற கிடைக்கவே இல்லை.
இதனால்தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி வாக்காளர்கள் எல்லாம் திமுக அடைத்து வைத்திருக்கிறது என்றும் அவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று கோபமாக சீறி இருக்கிறார்.
இப்போதைய ஈரோடு கிழக்கு நிலவரப்படி அதிமுகவுக்கு தனது அக்மார்க் தொண்டர்களை தவிர தேர்தல் பணி செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்பதுதான் நிலவரம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
நானியுடன் டான்ஸ் ஆடிய சந்தோஷ் நாராயணன்
ராமர் பால வழக்கு: அரசியல் சாசன அமர்வில் விசாரணை!