டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் தேர்தல்… ‘பிஜேபி’ வார்த்தையைக் கூட உச்சரிக்காத எடப்பாடி

அரசியல்

வைபை ஆன் செய்ததும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் புகைப்படங்கள் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி காலை 11:15 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அளித்த தீர்ப்பு இடைத்தேர்தலுக்கு முன்பே அதிமுகவுக்கு உற்சாகத்தை அளித்தது.

ஆனாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார் அதிமுக வேட்பாளர்.

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே மார்ச் ஐந்தாம் தேதி தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் அதிமுகவில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்தனர். இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்த்த நிலையில் அதிமுக நிர்வாகிகளுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அரசியல் சூழ்நிலையில் தான் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11:15 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்ட நிலையில் கடைசியாக எடப்பாடி பழனிச்சாமி அரங்கத்துக்குள் வந்தார்.

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கூட்டத்தைத் தொடங்கி வைக்க, துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வரவேற்புரையாற்றினார். அதன் பின் எடப்பாடி பழனிசாமியே பேசினார்.

அவரது பேச்சில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தான் முக்கிய விஷயங்களாக இடம் பிடித்திருந்தன.

”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாடுபட்ட உழைத்த உங்கள் அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் தோல்வி அடைவோம் என்பது எதிர்பார்த்த விஷயம் தான். ஆனால் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதிமுகவுக்கு என்றே இருக்கும் ஓட்டுகள் எங்கே போயின? இந்த இடைத்தேர்தலிலேயே 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கிறார்கள் என்றால்… இனி ஏதேனும் இடைஞ்சல்கள் வந்தால் கூட இதைவிட அதிகமாக வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நமது பூத் ஏஜெண்டுகளை நாம் இன்னும் கூடுதலாக கவனித்து இருக்க வேண்டும். அவர்கள் மீது இன்னும் அக்கறை காட்டி இருக்க வேண்டும். ஆனால் நாம் காட்டவில்லை. ஈரோடு தேர்தலில் நாம் செலவு செய்தது கடைசி வரைக்கும் சென்று சேரவில்லை” என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி..‌‌‌‌‌. ”இடைத்தேர்தலை கடந்து வந்து விட்டோம். அடுத்து நாடாளுமன்றத் தேர்தலை வலிமையாக எதிர் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். நாம் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். அதற்கு பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்த வேண்டும், இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் செயல்பாடுகளை இன்னும் தீவிரமாக்க வேண்டும். இளைஞர்களிடம் அதிமுகவை கொண்டு செல்ல வேண்டும்” என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் அவர், “உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது. அப்போது ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இருந்ததால் அந்த தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட கட்சி பணிகள் பற்றி உடனடியாக விவாதிக்கவில்லை. இந்த மாத இறுதிக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவோம். கட்சியில் அவர் இவர் என எவரும் உரிமை கொண்டாட முடியாது. தொண்டர்கள் தான் இந்த கட்சியின் தலைவர்கள். அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து நாடாளுமன்ற தேர்தலை வலிமையாக எதிர்கொள்வோம்” என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடக்கும் வார்த்தை மோதல்களை பற்றி எதுவும் சொல்லாத எடப்பாடி பழனிச்சாமி, ‘கூட்டணி பற்றி இப்போது யாரும் எதுவும் பேச வேண்டாம். இப்போதிருக்கும் நிலை தொடரட்டும். யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்.

அதே நேரம் கூட்டணி கட்சிகள் பற்றி இப்போது எதுவும் கருத்து தெரிவித்து சர்ச்சைகளை அதிகமாக்க வேண்டாம். பொதுச் செயலாளர் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ரெண்டும் தான் நமக்கு இப்போது முக்கியம். கூட்டணி பற்றி நாம் உரிய நேரத்தில் ஆலோசனை முடிவு எடுப்போம்’ என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி பிஜேபி என்ற வார்த்தையை கூட உச்சரிக்கவில்லை.

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின கொண்டாட்டத்துக்குப் பின் தலைமை கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய எடப்பாடி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் காத்திருப்போம் அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று எனக்கு தகவல் வருகின்றன. எனவே நாம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பரிசீலிக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட இந்த நிலையில் தான் இன்றும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பற்றி யாரும் இப்போது பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் ” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநரால் இந்த தடவை திருப்பி அனுப்ப முடியாது – அமைச்சர் ரகுபதி

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *