”இம் என்றால் சிறைவாசம்” : சாட்டை துரைமுருகன் கைதுக்கு எடப்பாடி கண்டனம்!

Published On:

| By christopher

Edappadi condemns the arrest of saattai Duraimurugan!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அங்கு தேர்தல் பரப்புரையின் போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், யூடியுபருமான சாட்டை துரைமுருகன் இன்று (ஜூலை 11) கைது செய்யப்பட்டார்.

தென்காசி பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை  கைது செய்த திருச்சி சைபர் கிரைம் போலீசார் அவரை விசாரணைக்காக திருச்சி அழைத்து சென்றனர்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கடந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இறுமாப்போடு, ‘இம்’ என்றால் சிறைவாசம் ‘உம்’ என்றால் வனவாசம்….. என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகனை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தலைமை பயிற்சியாளராக ’கோபக்கார கம்பீர்’ : உச்சம் செல்லுமா இந்திய அணி?

ஹேக் செய்யப்பட்ட என்.எல்.சி. சர்வர்… டிஜிட்டல் இந்தியா மீது அட்டாக்! என்ன செய்யப் போகிறது ஒன்றிய அரசு?