அரசு ஊழியர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் குறித்து திருச்சியில் தான் பேசியதில் உண்மை இருந்ததால் தான், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு பெயரிடாத அறிக்கை வெளியிட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்ததன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துரோகம் இழைத்துள்ளார். அதனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை அளிக்கத் தயார் என்று அரசு ஊழியர்கள் சங்கம் நவம்பர் 9 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக நவம்பர் 10ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அரசு ஊழியர்கள் சொல்வது சரிதான் என்று பதிலளித்திருந்தார்.
அவரது இந்த பதிலை விமர்சித்துப் பெயர் குறிப்பிடாத அறிக்கை ஒன்று வெளியானது. திமுக சார்பில் அந்த அறிக்கை வெளியானதாக கூறப்படும் நிலையில், அதில் யாருடைய பெயரும், பொறுப்பும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில் அந்த அறிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(நவம்பர் 12) காலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் ” என்னுடைய கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத்தெரிகிறது.
யாருடைய பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் PEN என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.
மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
கபட நாடகம் ஆடுவதில் Ph.D., பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு எதுவும் செய்யவில்லை.
இன்றைக்கு அவர்களுக்குப் பட்டை நாமம் போட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 2021 பொதுத் தேர்தலின்போது திமுக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்,
20,000 இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுச் சம வேலை – சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் பணிக் காலத்தில், மேற்படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் உள்ளிட்ட 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஜெயலலிதாவின் ஆட்சியிலோ, எனது தலைமையிலான அதிமுக அரசிலோ நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.
தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
18 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அதைச் செய்தார்; இதைச் செய்தார் என்ற புலம்பல்கள்தான் அந்த அறிக்கையில் அதிகமாக இருக்கிறதே தவிர, மு.க. ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்று எதுவும் இல்லை.
பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் (Shadow Government) போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக்கொள்வார்கள்.
நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த திமுக-விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது “வெந்ததைத் தின்று வாய்க்கு வந்தபடி உளறித் திரிபவர்களைப்போல்” பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்கள் : எடப்பாடியை அட்டாக் செய்த ஸ்டாலின்
படுமோசமாக உள்ள டெல்லியின் காற்று… பொதுமக்கள் அவதி!
விராட் கோலி குறித்து இந்தியில் செய்தி வெளியிட்ட ஆஸி. பத்திரிகை… காரணம் என்ன?