கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பலமுறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
இந்த புகாரையடுத்து வேலுமணி உள்ளிட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 20) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது, தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் திமுக அரசு, தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
திமுக அரசின் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், 2021-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ் நாடு லஞ்ச ஒழிப்புத் துறை அந்தர் பல்டி அடித்தது.
இதைப்பார்த்த சென்னை உயர்நீதிமன்றமே, தன்னிச்சையாக இவ்வழக்குகளை மீண்டும் விசாரித்து வருவதில் இருந்தே, திமுக அரசின் ஏவல் துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் அரும்பாடுபட்ட மாநகராட்சி பொறியாளர்களின் பெயர்களும் முதற்கட்ட தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மாநிலம் முழுவதும் உண்மையான பொறுப்புணர்வுடன் இயற்கைச் சீற்றங்கள், நோய் தொற்றுக் காலங்கள் போன்ற நேரங்களில் தொய்வின்றி பணிபுரியும் அதிகாரிகள் மத்தியில் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்படும் இதுபோன்ற வழக்குகளால், அரசு அதிகாரிகள் மத்தியில் ஒரு தொய்வு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், எங்கள் அரசு மேற்கொண்ட பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிறகு, ஓராண்டு தாமதத்திற்குப் பிறகே பணிகள் துவக்கப்பட்டன.
இதனால்தான், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ஆம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. விரைவில் பருவ மழையை சென்னை மாநகரம் எதிர்கொள்ள உள்ளது.
கடந்த 40 மாத கால செயல் திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள், தூர் வாருதல் பணிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், திமுக ஆட்சியின் மீது கூறப்படும் 4,000 கோடி ரூபாய் பற்றிய புகார்கள் மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்படுமோ தங்களின் ஊழல்கள் அம்பலப்பட்டு விடுமோ என்ற பயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.
“மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்துள்ளதால், திமுக அரசின் மீது மக்கள் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்கள்.
இந்தசூழலில், தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பவே தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுபோன்ற தகிடுதத்தங்களால் அதிமுகவை முடக்கிவிடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர்.
திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான். நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை” என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“பாடகி சுசித்ரா மனநோயாளி”: மறைமுகமாக சாடிய வைரமுத்து
திருப்பதி லட்டு… ‘சனாதன தர்ம ரக்ஷ்னா’ வாரியம் அமைக்க பவன் கல்யாண் கோரிக்கை!