பணபலம், சின்னம் மட்டும் வைத்துக்கொண்டு நம்முடன் கூட்டணி இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது என்று அமமுக செயற்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் கட்சி செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார்.
ஒட்டுமொத்த திமுகவுக்கே நெஞ்சுவலி
அவர் பேசுகையில், “செந்தில்பாலாஜி நம்மிடம் இருந்தவரைக்கும் நன்றாக இருந்தார். அவர் துறுதுறு என்று இருப்பவர். அதிபுத்திசாலி. ஆனால் என்றுமே அதிபுத்திசாலித்தனம் ஆபத்து தான்.
நம்மிடருந்து சென்றவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்று நான் அப்போதே கணித்து கூறினேன். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையிலேயே செந்தில்பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் அமலாக்கத்துறை சோதனையெல்லாம் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அந்த பயத்தில் தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவருக்கு மட்டும் நெஞ்சுவலி அல்ல. ஒட்டுமொத்த திமுகவுக்கே பயத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் நாம் அப்படியல்ல. துணிச்சல் மிகுந்த கட்சி. அம்மாவின் பெயரில், அம்மாவின் புகைப்படம் பொறித்த கொடி கொண்ட கட்சி அதனால் தைரியமாக இருங்கள்” என்றார்.
கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிர்ப்பு!
மேலும், ”கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தீவிரமாக செயல்படுங்கள். குக்கர் சின்னத்தை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு செல்லுங்கள். கூட்டணி பற்றி எல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.
பணபலம், சின்னம் மட்டும் வைத்துக்கொண்டு நம்முடன் கூட்டணி இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது. கொங்கு மண்டலத்தில் எடப்பாடியின் மீது அனைத்து சமுதாய மக்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.
வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர வாய்ப்புள்ளது. எனவே உறுதியாக வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா