வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. ஆகஸ்டு 15 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி அளித்த டீ பார்ட்டி படங்களை இன்ஸ்ட்ராகிராம் அனுப்பியிருந்தது. அதுபற்றி மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில் இதன் பின்னணி பற்றி டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து அமைச்சர்கள், சென்னையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என திமுக கிட்டத்தட்ட முழுமையாக பங்கேற்றது. அதுபோல அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி இந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை. மேலும், அவரது சார்பிலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ. கூட இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.
அதிமுகவில் எடப்பாடிக்கும் பன்னீருக்குமான அதிகார யுத்தம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர் அளித்த விருந்தில் பன்னீர் கலந்துகொள்வதும், எடப்பாடி புறக்கணித்திருப்பதும் அதிமுக விஷயத்தில் பாஜகவின் பார்வை என்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘மோடியை எதிர்க்கத் தயாராகும் எடப்பாடி?’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், ’அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக யார் உருவானாலும் அதை பாஜக விரும்பாது. எனவே நம் கட்சி விஷயத்தில் பாஜகவின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது. நாம் கூட்டணியில் இருக்கும்போதும் ரெய்டு நடத்துகிறார்கள். இல்லையென்றாலும் நடத்துவார்கள். அதையெல்லாம் எதிர்கொள்வோம். பாஜகவை எதிர்க்கத் தயாராவோம். ஜெயலலிதா போல மோடியுடன் நட்பு உண்டு என்றாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை மேற்கொள்வோம்’ என எடப்பாடி தரப்பு ஆலோசித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியே இப்போது நடந்து வருகிறது. பன்னீர் விஷயத்தில் பாஜகவில் இங்கிருக்கும் சிலர் தவறான விவரங்களை டெல்லிக்கு தெரிவித்து அவருக்கு உதவ முயற்சிப்பதாக எடப்பாடி கருதுகிறார். பாஜகவுக்கு தனது பலத்தை உணர்த்துவதற்காகத்தான் சில நாட்களுக்கு முன் பழனியில் தொடங்கி திருப்பூர், காங்கேயம், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்.காஞ்சிபுரம் என ஒரு மினி சுற்றுப் பயணத்தை செய்தார் எடப்பாடி. மிக பிரம்மாண்டமான தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே எடப்பாடி சென்னைக்கு சென்றார். பாஜகவுக்கு தனது தனிப்பட்ட பலத்தை காட்டுவதற்காகத்தான் இந்த சுற்றுப் பயணத்தையே திடீரென அரேஞ்ச் செய்தார் எடப்பாடி.
இதற்கிடையில் பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்றுமாறு தலைமை நீதிபதிவரை சென்று பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. இதை ஏற்று இவ்வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியாக ஜெயச் சந்திரனை நியமித்தார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. இந்த மாற்றம் நடந்த உடனேயே அதிர்ச்சியாகி, தனது தரப்பு சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்தார் எடப்பாடி. அப்போது சட்ட ரீதியான விஷயங்கள் மட்டுமல்லாமல் நீதிபதியை மாற்றுவதற்காக பன்னீர் எடுத்த பல்வேறு முயற்சிகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. இந்த ஆலோசனையில் பாஜக பற்றி தனக்கு ஏற்பட்டுள்ள கசப்பை பகிர்ந்துகொண்டார் எடப்பாடி.
இந்த பின்னணியில்தான் ஆகஸ்டு 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு தேனீர் விருந்துக்கு செல்ல வேண்டாம் என்று சில நாட்களுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் யாரும் செல்லாத நிலையில், விருந்துக்காக ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் விருந்து தொடங்கும் முன்பே ஆளுநரை தனியாக பார்த்து சில நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’அது ஒன்றும் கட்டாயம் இல்லை. ஓபிஎஸ் போல பந்திக்கு நாங்கள் முந்திக் கொள்ள மாட்டோம்’ என்று பதில் சொல்லியுள்ளார். இதில் இருந்து பன்னீர் முந்திக் கொண்டிருக்கிறார் என்று ஜெயக்குமார் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்ததன் மூலமாக தனது பாஜக எதிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டத் தொடங்கிவிட்டார் எடப்பாடி.’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.