வெளிநாட்டு முதலீடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா ஸ்டாலின்? – எடப்பாடி
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். 12 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (பிப்ரவரி 7) காலை சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஸ்பெயின் நாட்டில் ஹபக் லாய்டு, எடிபான், ரோக்கா ஆகிய நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 8) கேள்வி எழுப்பியுள்ள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டாலின் ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே.
ஆனால், 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப் பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
திமுக அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழிசைக்கு எம்.பி சீட் கிடைக்குமா? நடக்கும் ஆடுபுலி ஆட்டம்!
குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய குறைதீர் முகாம்!