எடப்பாடி அறிவிப்பு : விழுப்புரம் விரைந்த முதல்வர்!
கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரத்திலும், செங்கல்பட்டிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 9 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, முண்டியம்பாக்கம், பிம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் நேற்று இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்று கூடுதலாக மரக்காணம் காவல் நிலையம் ரைட்டர் மகாலிங்கம், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு ரவி, உட்பட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராயம் குடித்து ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்திருப்பது தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில்,
இந்த உயிரிழப்புகளுக்கு முழு பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என்று தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.
“நாளை (மே 16) காலை மரக்காணம் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்ல இருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
இதனிடையே இன்று (மே 15) மாலை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பாமக தலைவர் அன்புமணி வருவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத் துறை மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் சென்றிருக்கிறது.
இந்தசூழலில் இன்று காலை விழுப்புரத்துக்கு விரைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பைபாஸ் வழியாக திண்டிவனம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மதிய உணவு அருந்திவிட்டு, அதிகாரிகளை அழைத்து சில ரிப்போர்ட்டுகளை கேட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்துவிட்டு சிகிச்சை முறையை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.
அதிமுக மற்றும் பாமக தலைவர்களின் பயணத் திட்டத்தை அறிந்து கொண்டு, முண்டியம்பாக்கத்திற்கு முந்திக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில்.
வணங்காமுடி
“கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா”: குடியாத்தத்தில் ஆடிய பெண் காவலர்!
ஜவாஹிருல்லாவுடன் காலால் ஒரு செல்ஃபி- யார் இவர்?