”ஸ்டெர்லைட் ஆலைக்கு 86 ஏக்கர் நிலம் கொடுத்தது திமுக தான் ”: எடப்பாடி குற்றச்சாட்டு!
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு 86 ஏக்கர் நிலம் ஸ்டாலின் தொழில் துறை அமைச்சராக இருந்த திமுக ஆட்சி காலத்தில் தான் கொடுக்கப்பட்டது. அவரது காலத்தில் தான் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பூதாகரமாக எழுந்தது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சேலம் ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தினர் முன் அவர் பேசுகையில், “கடந்த சில நாட்களாக கட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் கூட ஆகாத சிலர் அதிமுகவை அழித்துவிடுவேன் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கு சொல்கிறேன். உங்களை போல எத்தனையோ பேரை அதிமுக பார்த்துவிட்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனது தான் சரித்திரம்.
அதிமுக இருக்கின்ற காரணத்தால் தான் ஏழை மக்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். மக்களுக்காக இருக்கின்ற கட்சி தான் அதிமுக. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இன்றும் தெய்வமாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதரவு கொண்ட கட்சி அதிமுக தான்” என்று பேசினார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தோம்!
மேலும், “இன்றைய தினம் ஸ்டெர்லட் ஆலை தொடர்பாக என்னை பற்றி திமுக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு 86 ஏக்கர் நிலம் ஸ்டாலின் தொழில் துறை அமைச்சராக இருந்த திமுக ஆட்சி காலத்தில் தான் கொடுக்கப்பட்டது.
1500 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என்று அப்போது சொன்னது ஸ்டாலின் தான். அது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது காலத்தில் இந்த பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது.
அதிமுக ஆட்சியின் போது அந்த ஆலையை மூடுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புதுப்பிக்க கோரி ஆணை வந்தபிறகும் அதனை புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்தது அதிமுக அரசு.
சம்பவம் நடக்கும் முந்தைய நாள் கூட தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. ஆனால் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் தடையை மீறி கூட்டத்தை திரட்டி ஊர்வலம் நடத்தி கலவரம் செய்ய மக்களை தூண்டி விட்டார்.
இதேபோல், விவசாயிகள் மின் கட்டணத்தில் ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் போராடிய விவசாயிகளை குருவி சுடுவது போல சுட்டு வீழ்த்தியது திமுக அரசு.
இதேபோல் கோவை, நெல்லை, மதுரை என மொத்தம் 14 விவசாயிகளை ஒரு பைசா மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி போராடியபோது திமுக அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இடையில் வழிமறித்து போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர்.
அதனால் உயிருக்கு பயந்து 17 பேர் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் 17 பேரின் இறப்புக்கு யார் காரணம்? யார் பொறுப்பு?.. இந்த திமுக அரசு தான் காரணம்.
இதுபோன்று திமுக ஆட்சியில் ஏராளமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. தேர்தல் நேரத்தில் அவதூறு பரப்பினால், அரசியல் ஆதாயத்திற்காக இப்படி சொன்னீர்கள் என்றால் இதற்கு தகுந்த பதிலடியை அதிமுக கொடுக்கும்” என்றார்.
நீட் தேர்வு விவகாரத்திலும் பொய்!
தொடர்ந்து, “நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார். காங்கிரசும், திமுகவும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.
அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தேன். ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக.
அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கடந்த 5 ஆண்டுகளில் திமுக 38 எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.
ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு ஒற்றை செங்கல்லை தூக்கி கொண்டு அமைச்சர் உதயநிதி விளம்பரம் செய்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப பொய் பேசி, அதனை உண்மையாக மாற்ற முயற்சித்து வருகிறார்.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா திறக்கப்படாமல், விவசாயிகளுக்கான திட்டங்களை பலவற்றை திமுக அரசு முடக்கியுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்து தொடங்கப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IPL 2024 : விமர்சனங்களுக்கு ஸ்டார்க் பதிலடி… கொல்கத்தா அபார வெற்றி!
CSK vs MI: முக்கிய வீரர் காயத்தால் அவதி… என்ன செய்யப்போகிறது சென்னை?
மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை… மகுடம் சூடப் போவது யார்?