தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது.
இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி,”ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா வீர வரலாற்று எழுச்சி மாநாடு குறித்தும் அதை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. அதிமுக பல சரித்திர சாதனைகளை படைத்துள்ளது.
எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு இன்றைக்கு ஆலமரம் போல் நிற்கின்றது. அதிமுக வரலாற்றில் இன்றைய தினம் ஒரு சரித்திர நாள்.
அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுகவினர் எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினார்கள். அத்தனையும் அதிமுக நிர்வாகிகளாலும், தொண்டர்களாலும் தகர்த்தெறியப்பட்டது.
பல விமர்சனங்களை இந்த ஓர் ஆண்டில் நாங்கள் சந்தித்தோம். அதிமுக மூன்றாக போய்விட்டது, நான்காக போய்விட்டது அதில் இருக்கின்ற உறுப்பினர்கள் குறைந்துபோய்விட்டனர் என்று எதிரிகள் விமர்சனம் செய்து கொண்டு இருந்தனர்.
ஆனால் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான்.
அதிமுக உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை, சிதறவும் இல்லை கட்டுக்கோப்பாக உள்ளது என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கையின் மூலம் நிரூபித்துள்ளோம்.
அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அமையும்”என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும், ”நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும் பொழுது மாமன்னன் படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்; நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது அதை பற்றி கேளுங்கள் மாமன்னன் படம் ஓடினால் என்ன; இல்லன்னா என்ன? இதுவா நாட்டுமக்களுக்கு தேவை? இதுவா நாட்டு மக்களின் வயிற்று பசியை போக்க போகிறது?” என்று அங்கிருந்த பத்திரிகையாளர்களை கடிந்து கொண்டார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தெற்காசிய கால்பந்து : வரலாறு படைத்த இந்திய அணி!
கலைஞர் நூற்றாண்டு நூலகம்…தமிழனாக பெருமை: அமைச்சர் அன்பில் மகேஷ்