தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 9) குற்றம் சாட்டியுள்ளார். Edappadi accuses no safety
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” ‘திராவிட’ என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் ‘திராவிட மாடல்’ என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை திமுக-வின் தலைவர் ஸ்டாலின் நடத்தி வருவது, தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அஜாக்கிரதையால், சமூக விரோத செயல்களில் ஈடுபட, ஆளும் திமுக-வினருக்கு கட்சிக் கொடியின் பெயரால் லைசென்ஸ் வழங்கி உள்ளதால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களோடு, கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
இதை ஊடகப் பேட்டியில் காவல் துறை அதிகாரியே ஒத்துக்கொள்வது, தமிழகக் காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி உள்ளதையே காட்டுகிறது.
கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே, பள்ளி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம்.
மணப்பாறை தனியார் பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம்.
வேலூரில், இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, ஆறு பேர் கொண்ட காமுக கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்.
தமிழகக் காவல் துறையின் உயர் பதவியில் உள்ள பெண் ADGP-யே, தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என புகார்.
கள்ளக்குறிச்சியில் பெண் VAO மீது சாணி அடித்து தாக்குதல்.
சிவகங்கையில், காவல் நிலையத்தில் புகுந்து பெண் SI மீது தாக்குதல்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற உண்மையான, பின்புலம் மறைந்துள்ள குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதில், பத்திரிகையாளர், காவல் துறை என்று தடம் மாறும் விசாரணை.
கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய காரில் துரத்தி அச்சுறுத்தியவர்கள் குறித்து துப்பு துலக்க வேண்டிய காவல் அதிகாரி, இரண்டு வெவ்வேறான பேட்டிகள் அளிக்கிறார். உண்மையில் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுகிறதா? அல்லது புனையப்பட்ட நாடகம் அரங்கேற்றமா? என்று காவல் துறைதான் விளக்க வேண்டும்.
கோவை மத்திய சிறையில் கைதி தனது உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியீடு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்திற்கே இன்னும் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் கலப்பு செய்திகள் வெளிவருகின்றன
திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று இருமுறை கள்ளச் சாராய மரணங்கள் நடைபெற்றும், கள்ளச் சாராய விற்பனை தொடர்வது வாடிக்கையாக உள்ளது.
தொடரும் குற்றச் சம்பவங்கள் பற்றிய எனது இந்த அறிக்கைக்கும், சட்ட நடவடிக்கை எடுக்காமல், யாரையாவது விட்டு அறிக்கை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அந்த காலத்தில் மன்னன் நகர்வலம் போவதுபோல, இந்த ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நகர்வலம் போக ஆரம்பித்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த சமயத்தில், அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாத முதலமைச்சரின் செய்கை கண்டனத்திற்குரியது.
இத்தகைய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியில், விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என, கொதிப்படைந்துள்ள அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தக் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Edappadi accuses no safety