நாளை (ஜூலை 28) சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை முற்றி ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எரிமலையாய் யுத்தம் வெடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி
நாளை (ஜூலை 28) தமிழகத்துக்கு வருகிறார்.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விடைபெறும் ராம் நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி
தனது இல்லத்தில் அளித்த விருந்தில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அருகே இருக்க பிரதமர் மோடியுடன் சில நிமிடங்கள் பேசியவர், அடுத்த நாள் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

ஆனால் அவருக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளாமல் 23 ஆம் தேதியே சென்னை திரும்பினார்.
அன்று காலை டெல்லி தமிழ்நாடுபவனில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ‘ஓ.பன்னீருடனான மோதல்’ பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ‘உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து பேச இயலாது. அருள்கூர்ந்து உட்கட்சி விவகாரம் பற்றி கேள்வி கேட்பதை தவிருங்கள். எல்லாம் முடிந்ததும் சொல்கிறேன்’ என்று சுணக்கமாகவே பதிலளித்தார்.
எடப்பாடியின் டெல்லி பயணம் பாதியில் முடிந்ததையும், அதே நேரத்தில் பன்னீர்செல்வம் அடுத்தடுத்து புதிய பதவிக்கான நியமன அறிவிப்புகளையும் வெளியிட்டதையும் வைத்து அதிமுகவுக்குள்ளேயே விவாதம் எழுந்தது.
எடப்பாடிக்கு டெல்லியின் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் அதேநேரம் பன்னீருக்கு டெல்லியின் ஆசி இருப்பதாகவும் அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சில நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனபோதும் வீட்டுக்குச் செல்லாமல் சில நாட்களாக தனியார் ஹோட்டலில் தனிமையில் இருக்கிறார். அப்போது அவர் டெல்லி பாஜகவின் முக்கியப் புள்ளிகளைத் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. டெல்லியில் இருந்து வந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அவர் அடுத்தடுத்து புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்து வருகிறார்.
ஓ.பன்னீர் செல்வமும் பொதுக்குழுவைக் கூட்டினால் தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கூட்டியதுதான் உண்மையான பொதுக்குழு என்ற வாதத்தை இரு தரப்பும் வைக்க இயலும். இப்போதே ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என
தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் மனு அளித்துள்ளார். எடப்பாடியும் பொதுக்குழு முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் செல்வாக்கு பெற்ற அமைப்பு என்பது ஏற்கனவே அறியப்பட்ட நிலையில் அதிமுகவில் தங்களது தலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள பன்னீர், எடப்பாடி இருவருமே பிரதமர் மோடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்க விரும்புகிறார்கள். இதற்காக ஏற்கனவே பன்னீர் செல்வம் பிரதமருக்கு நெருக்கமானவர்களிடம் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியோ மூத்த அதிமுக பிரமுகரான தம்பிதுரையை தன் சார்பில் மோடியிடம் அனுப்பி டெல்லியில் தூது விட்டிருக்கிறார்.
28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி அன்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில்தான் தங்குகிறார். இந்த இரவில் பன்னீர்செல்வம், எடப்பாடி இருவருமே மோடியை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். இருவரையும் தனித்தனியே பிரதமர் சந்தித்து பேசுவாரா அப்படி பேசினால் அதன்பின் அதிமுகவின் போக்கில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு பிரதமரின் சென்னை பயணத்தில் பதில் கிடைத்துவிடும். இன்று மாலை வரை பாஜக நிர்வாகிகளையே பிரதமர் சந்திப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
–வேந்தன்