தலைமையைக் கைப்பற்றிய இபிஎஸ்: தலைமைக் கழகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ்- அதிகாலை ஆபரேஷன்!

Published On:

| By Guru Krishna Hari

பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது.  அதிமுக தலைமைக் கழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், பாட்டில்களை வீசி கடுமையான தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 6.39 மணிக்கு  வீட்டிலிருந்து எடப்பாடி புறப்பட்டார்.   வழக்கமாக ஓபிஎஸ்  வீட்டு வழியாக செல்லும் எடப்பாடி இம்முறை ரூட்டை மாற்றி  டிடிகே சாலை வழியாக புறப்பட்டார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டைலில் ஃபுல் மேக்கப்புடன் வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு சென்றவர், வழியில் யார் வரவேற்பு கொடுத்தாலும் வாங்காமல் தொட்டு பார்த்து விட்டு புறப்பட்டார், 

ஆனால் ஓபிஎஸ் மற்றொரு பக்கா பிளானுடன் இபிஎஸ்-ஐ மிரட்ட தயாராகியிருந்தார். பொதுக்குழு மீது இபிஎஸ் கவனம் வைத்த நிலையில், அதிமுக தலைமையகத்திற்கு குறிவைத்தார் ஓபிஎஸ்.  முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகமாக கூடும் தகவல் தெரிந்து ஆதிராஜராம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தலைமை கழகத்தில் நிறுத்தி வைத்து விட்டு, தலைமை கழகத்தை பூட்டிவிட்டு சாவியை எடுத்துவிட்டு புறப்பட்டார் கள்.

 ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் இந்த பிளானுக்கு மூளையாக இருந்துள்ளனர். என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என இரவே  திட்டம் தீட்டினர்.

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சென்னையில் தங்கள் பலத்தை நிரூபிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆதரவாளர்களை களமிறக்கியுள்ளனர். நேற்று இரவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை நோக்கி அணிவகுத்து வர ஆரம்பித்தனர். தேனியில் இருந்து மட்டும் சுமார் 300 வாகனங்கள் சென்னை நோக்கி படையெடுத்து வந்துள்ளன. இதுமட்டுமில்லாமல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்குழு ஆரம்பமாவதற்கு முன்பே ஓபிஎஸ் வீட்டில் காலை முதலே ஆதரவாளர்கள் குவிய ஆரம்பித்தனர். நேற்று இரவே சென்னை அழைத்து வரப்பட்ட ஆதரவாளர்கள் அனைவரும் ஓபிஎஸ் வீட்டின் அருகிலேயே இருந்த ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.

வானகரம் நோக்கி இபிஎஸ் ஆதரவாளர்கள் சென்ற நிலையில்,  காலை 7 மணியில் இருந்தே அதிமுக தலைமையகத்தை குறிவைத்து படையெடுத்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இந்த தகவல் இபிஎஸ் தரப்புக்கு தெரிய வந்தவுடன் தலைமை அலுவலகத்தை உள்ளடக்கிய பகுதியின்  மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமிற்கு உத்தரவிட்டு தனது ஆதரவாளர்களை களமிறக்கினார். 

அதிமுக தலைமையகத்தில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, கத்திக்குத்து என இரு தரப்பினருக்கும் இடையே மோசமான சூழல் நிலவியது. பொதுக்குழு நடத்தப்படும் மண்டபத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் ஓபிஎஸ் புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த இபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

 ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமையகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். சிறிது நேரத்தில் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே… ஓபிஎஸ் வீட்டிலிருந்து 7.58க்கு வெளியில் வந்தார்.  அப்போது 40 கார்கள் மற்றும் வேன் பஸ்களில் காத்திருந்த சுமார் 750  தொண்டர்கள்,  ’ஓபிஎஸ் வாழ்க இபிஎஸ் ஒழிக என கோஷமிட்டனர்  சில நிமிடங்களில் அதிமுக தலைமையகம் வந்து இறங்கினார் ஓபிஎஸ்.

தனியார் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் தைரியமாக அலுவலகத்தில் வந்து இறங்கியது, அங்கு அவருக்காக களமிறக்கப்பட்ட ஆதரவாளர்களின் நம்பிக்கையால் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

உள்ளே நுழைந்ததும் அதிமுக அலுவலக வாசலில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு கீழே விழுந்து வணங்கினார் ஓபிஎஸ். அவர் வந்ததும் மேலும் உற்சாகமான தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தின்  எல்லா பகுதிகளுக்கும் பரவினர்.

மேல் தளத்துக்கு சென்ற ஓபிஎஸ் தனது தொண்டர்களின் பாதுகாப்போடு தலைமை அலுவலகத்துக்குள் அமர்ந்திருக்கிறார். அந்த நேரம் பொதுக்குழுவை நடத்த அனுமதி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய தகவலை அவரிடம் கொண்டுசெல்ல, ‘இது எதிர்பார்த்ததுதானே?’ என்றிருக்கிறார் பன்னீர்.

உள்ளே  வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டிருக்க அதிமுக அலுவலகத்தின் வாசலில் பதற்றமும் பரபரப்பும் தொடர்ந்து வருகிறது.

போலீசின் இப்போதைய கவலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஓபிஎஸ் எப்போது வெளியே வருவார் என்பதுதான்.   அதிமுக தலைமைக் கழக வாசலில்,  “இனி தர்ம யுத்தம் இல்லை  நேரடி யுத்தம் தான் வா வா எடப்பாடி வா” என்று கோஷமிட்டு வருகின்றனர் பன்னீர் ஆதரவாளர்கள். ஓபிஎஸ் மகன் எம் பி ரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் உட்பட ஒன்பது பேர் கொண்ட டீம் கடந்த ஐந்து நாட்களாக திட்டமிட்டு தமிழகம் முழுவதுமிருந்து  சுமார் 13 ஆயிரம் பேரை அழைத்து சென்னை மாநகரத்தில் தங்க வைத்து எடப்பாடிக்கு சவால் விட்டிருக்கிறது. அடுத்து அதிமுக அலுவலகத்தில் என்ன நடக்குமோ என்ற பதற்றம் தொடர்கிறது.

மின்னம்பலம் டீம்

   

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel