மோடியை எடப்பாடி ஏன் சந்திக்கவில்லை: ஜெயக்குமார்
டெல்லியில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் சந்திக்காதது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, ஆகியவற்றைக் கண்டித்து இன்று (ஜூலை 25) அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை ஜனநாயக பூர்வமாக மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இன்று (ஜூலை 25) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் என்கிற வகையில் எழுச்சியோடு இதுவரை சென்னை மாநகரம் காணாத வகையில் வரலாற்றை படைக்க வேண்டும் என்பதற்காக வருகிற 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது” என்றார்.
அப்போது, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் பிரதமர், உள்துறை அமைச்சரிடம் நேரம் கேட்டும் கிடைக்கவில்லை என்பதால் பாதியிலே திரும்பி வந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், “திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் தம்பிதுரை உட்பட எம்பிக்கள் பலரும் பங்கேற்றனர். டெல்லியில் குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் என இத்தனையும் நடைபெறுகிறது. இதனால் பணிநிமித்தம் காரணமாகச் சந்திப்பு தள்ளிப் போயிருக்கலாம். மற்றொரு நாளில் இந்த சந்திப்பு நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை வரும் பிரதமரை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகப் பொதுக்குழுவால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சார்பாகச் சந்திப்பார். ஓ.பி.எஸ் சந்திக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது” என தெரிவித்தார்.
14 மாவட்டங்களுக்கு புதிய அதிமுக மாவட்டச் செயலாளர்களை ஓ.பி.எஸ் அறிவித்தது குறித்த கேள்விக்கு,”ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற வேலை இது” என விமர்சித்தார்.
கடலுக்குள் நடுவே கலைஞருக்காகப் பேனா நினைவுச் சின்னம் வைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளே இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கல்விக்கடன் ரத்து, மகளிருக்கு மாதம் 1000 எனச் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கலைஞருக்குப் புகழ் பாட வேண்டும் என்பதற்காக ஊர் தோறும் சிலை வைக்கிறார்கள். இதற்கெல்லாம் பணம் இருக்கும் போது மக்கள் நலப்பணிக்கு மட்டும் நிதி இல்லையா?
திமுக அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வைத்து, மெரினா கடற்கரையில் கலைஞருக்குப் பேனாவை வைக்கட்டும். இந்த அரசாங்கம் விளம்பர அரசியலுக்குக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள்.
நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு லேபிள் ஓட்டுவது, பெயிண்ட் அடிப்பது தான் திமுக அரசு செய்து வருகிறது. அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி உயர்த்தியதற்கு, நிதியமைச்சர் பி.டி.தியாகராஜன் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்
க.சீனிவாசன்