அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடல்நிலை சரியில்லாமல் இன்று (ஜூலை 29) காலையில் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார்.
அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என மீண்டும் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. யார் பொதுச்செயலாளர் என்ற பிரச்சினை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் வரையில் சென்றுள்ளது.
அதிமுக தலைமைப் பொறுப்பை பிடிக்க மத்தியில் ஆளக்கூடிய பாஜக தலைமையின் ஆசி நிச்சயமாக வேண்டும் என கருதுகின்றனர் ஒபிஎஸ்ஸூம் இபிஎஸ்ஸூம். இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஈபிஎஸ் ஏமாற்றத்துடன் திரும்பினார் சென்னைக்கு.
இந்தப் பின்னணியில் சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் துவக்கி வைக்க இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடியை நேற்று விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார் எடப்பாடி. அதற்குப் பிறகு அவர் மோடியை சென்னையில் நேற்று தனிப்பட்ட முறையில் சந்திக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை அடையாறு ராணுவ விமான தளத்தில் ஓபிஎஸ் சந்திக்க போவதாக செய்தி உலா வருகிறது.
ஒபிஎஸ்சின் திட்டத்தால் சமீபகாலமாக மத்திய அரசு தனக்கு எதிராக குறிவைத்து நடவடிக்கைகளை ஏவியிருப்பதாக உணரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெரும் மன உளைச்சலில் இருந்து வருகிறார். அதிமுக நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி 27 ஆம் தேதி மேடையிலேயே மயக்கம் அடைந்தார். அத்தோடு அவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவும் எடப்பாடிக்கு பிரஷர் மற்றும் சில பிரச்சனைகள் இருந்துள்ளது. இதனால் வீட்டுக்கே குடும்ப டாக்டரை வரவழைத்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர் சில டெஸ்ட்கள் எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அதனால் இன்று ஜூலை 29ஆம் தேதி காலை சுமார் 7.30 மணியளவில் மயிலாப்பூர் ரங்கேஷ் கார்டனில் அமைந்துள்ள அட்வான்டேஜ் இமேஜிங், ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ள ஈபிஎஸ்க்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
வணங்காமுடி