அதிமுகவின் தலைமை பொறுப்பை யார் கைப்பற்ற போவது என ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் யுத்தம் உக்கிரமாக நடந்துவரும் நிலையில் அ.தி.மு.க-வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அரசியல் பழிவாங்கும் விதமாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 15) காலை சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வந்த அவருக்கு திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் மாலை அணிவித்து செங்கோலையும் வழங்கினர். அங்கே தொண்டர்களிடம் உரையாற்றிவிட்டு, சேலம் தலைவாசலுக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலில் அவரது சொந்த மாவட்டத்தின் ஸ்பெஷல் வரவேற்பு காத்திருந்தது.
தலைவாசலில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி திரண்டிருந்த தொண்டர்களிடையே பேசினார்.
”அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் கட்டிக்காத்த அதிமுகவை இன்று துரோகிகள் ஒழித்துக்கட்டி அழித்து விட நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது.
மேலும், அதிமுகவின் கட்சி அலுவலகத்தை பலர் அபகரிக்கப் பார்க்கின்றனர். ஆனால் உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அதனை யாரும் தொட்டுப்பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார். அவரது கனவு, சூழ்ச்சி எல்லாம் எடுபடாது. அவரை நம்பி யாரும் சென்று காலத்தை வீணாக்காதீர்கள். எனவே ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபடுவோம்” என்ற எடப்பாடி தொடர்ந்து பேசுகையில்,
”தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் ஆட்சி தான் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வென்றுள்ளோம். சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை எனவும் காலச்சக்கரம் சுழன்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
ஆர்.எஸ் பாரதி கட்சியில் இருந்து கழட்டிவிடப்படும் நிலையில் உள்ளதால் எதை வேண்டுமானாலும் பேசி கட்சியில் பொறுப்பு வகிக்க பார்க்கிறார். நாங்கள் பேச ஆரம்பித்தால் திமுக தலைவர்கள் நாறிப்போய்விடுவார்கள். அதிமுக தொண்டர்கள் உழைத்து வாழ்பவர்கள், அன்னக்காவடிகள் கிடையாது, திமுகவை போன்று சுரண்டி வந்தவர்கள் கிடையாது” என திமுகவை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி.
அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு செல்லும் வரை வரவேற்பு தொடர்ந்தது.
–க.சீனிவாசன்