வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாத காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு சட்டமன்றம் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி இன்று (அக்டோபர் 11) வரை நடைபெற்றது. கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீரை திறந்து விடாமல் அடம்பிடிக்கும் நிலையில்… தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறந்து விட மத்திய அரசு உத்தரவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
இன்று, ’எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து சபாநாயகருக்கு 10 முறை கடிதம் கொடுத்தும் அவர் மரபை மீறி செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே தர்ணா செய்ய முயற்சித்து அது கலாட்டா ஆனது.
இப்படி இந்த மூன்று நாட்களிலும் சட்டமன்றத்தில் நடந்த விஷயங்கள் மற்றும் சட்டமன்றத்திற்கு வெளியே நடந்த விஷயங்கள் குறித்து மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் மீது முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தத்தில், கோபத்தில் இருப்பதாக சட்டமன்றத்திலேயே சில அமைச்சர்கள் பேசிக் கொண்டனர்.
துரைமுருகன் மீது முதலமைச்சர் வருத்தம் கோபம் கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்று சட்டமன்ற வட்டாரங்களில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.
‘ஆகஸ்ட் 9ஆம் தேதி காவிரித் தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ’அதிமுகவின் எம்பிக்கள் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு நீதி கேட்டு சுமார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே அன்று ஸ்தம்பிக்க வைத்தனர். ஆனால் அதிமுகவுக்கு இருந்த துணிச்சல் திமுகவுக்கு இல்லை’ என்று குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், ’துணிச்சலை பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை’ என்று பதில் அளித்தார். அதே நேரம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுந்து, ’அன்று நீங்கள் நாடாளுமன்றத்தில் 20 நாட்களுக்கு மேல் சபையை முடக்கியதற்கு காரணம், அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் விதமாக தான். தமிழகத்துக்காக அல்ல’ என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து, ’நீங்கள் அன்று போராடினீர்கள். அதை நான் மறுக்கவில்லையே. நீங்க இருந்த போது நீங்களும் போராடுகிறீர்கள். நாங்க இருக்கும் போது நாங்களும் போராடுகிறோம்’ என்று பதிலளித்தார்.
அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமன்றம் முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அழைத்து பாராட்டினார். மேலும், ’நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் அமளி செய்ததற்கு காரணம் காவிரி பிரச்சனை அல்ல. மத்திய பாஜக அரசை பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவதற்கு தான் என்று நீங்கள் சொன்ன பதில் சிறப்பாக இருந்தது. இதை மையமாக வைத்து இன்று மாலை அறிவாலயத்தில் ஒரு சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துங்கள்’ என்று அறிவுறுத்தினார்.
ரகுபதி இவ்வாறு அதிமுகவுக்கு எதிராக பதிலளித்த நிலையில் துரைமுருகன் எடப்பாடி பழனிசாமியிடம் இணக்கமும் நெருக்கமும் காட்டுவது போல பதில் அளித்ததை ஸ்டாலின் ரசிக்கவில்லை என்கிறார்கள் சட்டமன்ற திமுக வட்டாரத்தில்.
இது மட்டுமல்ல எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாகவும் துரைமுருகன் மீது கோபமாகத்தான் இருந்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள். அதுபற்றி கேட்டபோது, ‘சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த அமைச்சரான துரைமுருகன் மற்றும் சில மூத்த திமுக நிர்வாகிகளுடன்… இந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தினார்.
அப்போது துரைமுருகன், ’பன்னீர் செல்வத்துக்கு எந்த பிடிமானமும் இல்லை. அவருக்கு ஆதரவாக தொண்டர்களும் இல்லை. அவருக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை சேர்த்து மூன்று பேர் தான் உள்ளனர். எனவே மரபின்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்குரிய இருக்கையை உதயகுமாருக்கு அளித்து விடலாம். பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் என்பதால் அவருக்கு எதிர்க்கட்சியின் முன் வரிசையில் வேண்டுமானால் இடம் அளிக்கலாம்’ என்று தனது கருத்தை முதலமைச்சரிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் பழைய பன்னீர் செல்வமே அமர்ந்திருந்தார். இந்த விஷயத்திலும் துரைமுருகனின் ஆலோசனையை முதல்வர் ஏற்கவில்லை.
இந்த பின்னணியில் சட்டமன்றத்திலும் சரி சட்டமன்றத்துக்கு வெளியேயும் சரி அமைச்சர் துரைமுருகன் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியோடு அதீத நெருக்கமும் இணக்கமும் காட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருதி இருக்கிறார்.
இந்த சமீபத்திய விஷயங்கள் மட்டுமல்ல… 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வசித்த பங்களாவிலேயே தொடர்ந்து வசிக்க விரும்பியிருக்கிறார். இது முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு வந்தபோது, ‘அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிட்டாரே… அதற்கேற்ற பங்களாவை ஒதுக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அப்போது துரைமுருகன், ‘ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர். அதனால் அவர் வசித்த பங்களாவையே கொடுத்துவிடலாம்’ என்று துரைமுருகன் சொல்ல சரி என்று விட்டுவிட்டார் ஸ்டாலின்.
ஆக இந்த ஆட்சி ஆரம்பித்ததில் இருந்தே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியோடு நெருக்கமாகவே இருக்கிறார் துரைமுருகன் என்ற கோபம் ஸ்டாலினிடம் இருக்கிறது என்கிறார்கள்.
இது தொடர்பாக துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, ‘சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினரான துரைமுருகன் பண்பாடு நிறைந்த அரசியல்வாதி. காவிரி பிரச்சனைக்கான தீர்மானத்தை எந்தவிதமான சர்ச்சையும் சலசலப்பும் இல்லாமல் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றுவதற்காகவே சில நீக்குப் போக்கு நடவடிக்கைகளை துரைமுருகன் மேற்கொண்டார். அவருக்குத் தெரியாத நக்கல் நையாண்டியா? எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் துரைமுருகன் தன் கருத்தை மனம் திறந்து முதலமைச்சரிடம் சொல்லி இருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சொன்ன சில முக்கிய தகவல்களை சிந்தாமல் சிதறாமல் எடப்பாடியிடம் கொண்டு சேர்த்ததிலும் துரைமுருகனுக்கு முக்கிய பங்கு உண்டு.
முதலமைச்சருக்கும் துரைமுருகனுக்கும் இடையே அவ்வப்போது ஊடல் நிகழும். சில மணித் துளிகளில் ஓரிரு நாட்களில் அந்த ஊடல் சரியாகிவிடும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsAFG: ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை முறியடித்த ரோகித் சர்மா… இந்தியா அபார வெற்றி!
ICC worldcup: வாரி வழங்கிய சிராஜ்… அதிகபட்ச ஸ்கோர் குவித்த ஆப்கானிஸ்தான்!