’அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன என விசாரித்துவிட்டீர்களா?’ என்று இன்ஸ்டா மெசேஜில் ஒரு கேள்வி பிற்பகலே வந்து விழுந்தது.
அதற்கு பதிலளித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“டிசம்பர் 27 அதிமுக தலைமை அலுவலகத்தில் மாசெக்கள் கூட்டம் நடைபெற்றது. தனது பசுமை வழிச் சாலை இல்லத்தில் இருந்து காலை 10.20க்கு புறப்பட்ட தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வழியெங்கும் வரவேற்பு அளித்தனர். ‘நிரந்தரப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்’ என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். தன் வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் வழியில் நின்ற எல்லாருக்கும் வண்டியை ஸ்லோ பண்ணி கை கொடுத்து புன்னகைத்தபடியே அதிமுக அலுவலகத்துக்கு 11 மணிக்கு வந்தடைந்தார் எடப்பாடி. கட்சி அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பிற்குப் பின் மாடியில் கூட்டம் நடக்கும் அரங்கத்துக்கு வந்தார். அவருக்கு முன்னதாக அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர்.
முதலில் மைக் பிடித்த எடப்பாடி பழனிசாமி, ‘உங்க எல்லாருக்கும் வணக்கம். என்ன திடீர்னு கூட்டம்னு நினைக்கலாம். புத்தாண்டு, பொங்கல் வருது. நம்ம எல்லாருக்கும் அவங்கவங்க ஊர்ல பல நிகழ்ச்சிகள் இருக்கும். தலைமைக் கழக நிர்வாகிகளை அப்பப்ப சந்திக்கிறோம். ஆனா எல்லா நிர்வாகிகளையும் இந்த பண்டிகை நேரத்துல ஒண்ணா சந்திக்கணும்னு வாழ்த்து சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் இந்த கூட்டம். எல்லாருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள். வர்ற வருடம் அதிமுகவுக்கு வெற்றிகரமாக இருக்கும். புது வருடத்துல நாம என்னென்ன செய்யணும்னு விவாதிக்கத்தான் இந்த கூட்டம்” என்று சில வார்த்தைகள் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
பிறகு துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசினார். ’அதிமுக ஒற்றுமையாகவும் வலிமையாகவும் இருக்கிறது. தெக்க சில பேரு அவரோட பேச்சுவார்த்தை நடத்துக்கிட்டிருக்கோம்னு கிளப்பி விட்டுக்கிட்டு இருக்காங்க. அவர் என்ன தென் மண்டலத் தலைவரா? அவரோட பேச என்ன இருக்கு? ஒண்ணுமில்லை. அவர் தொகுதியில ஜெயிக்கவே தண்ணிக்குடிச்சவரு அவரு. அதனால அதிமுகன்னா நாம்தான். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்’ என்று ஓபிஎஸ்சை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.
பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும், பன்னீரை கடுமையாகத் தாக்கிப் பேசினார். துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘மாவட்டச் செயலாளர்கள் உங்கள் கருத்துகளை இதுபோன்ற தலைமைக் கழக கூட்டங்களில் பேசுங்கள். மாறாக பொது இடங்களில் அவருடன் கூட்டணி கிடையாது, இவருடன் கூட்டணி கிடையாது என்று தலைமை பேச வேண்டிய விஷயங்களை பேசாதீர்கள். அதை தொண்டர்கள் கருத்து என்று சொல்லாதீர்கள். உங்கள் கருத்து என்ன என்பதை இங்கே பேசுங்கள்’ என்று சி.வி. சண்முகத்தை பெயர் குறிப்பிடாமல் சுட்டிக் காட்டினார்.
எஸ்.பி. வேலுமணி பேசுகையில், ’நமது ஒற்றுமையில் ஏதேனும் ஒரு கீறல் விழாதா என்று பலரும் காத்திருக்கிறார்கள். அன்று டிசம்பர் 24 ஆம் தேதி எம்.ஜிஆர். நினைவிடத்தில் அண்ணன் சி.வி. சண்முகம் டிராபிக் ஜாம் காரணமாக தாமதமாக வந்தார். அதை என்னிடம் கூறினார். அதற்குள் அவர் தனியாக அஞ்சலி செலுத்திவிட்டார் என்று கிளப்பிவிட்டார்கள். இந்த அளவுக்கு நமது ஒற்றுமை எதிரிகளின் கண்களை உறுத்துகிறது’ என்றார்.
இறுதியாக எடப்பாடி பழனிசாமி பேசினார். “கட்சியின் சட்டப் போராட்டங்கள் குறித்து கவலை கொள்ளாமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் , நாடாளுமன்ற தேர்தல் பணிகளையும் உடனே தொடங்குங்கள். பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள். ஒவ்வொரு பூத்திலும் 18 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேல் இருக்கக் கூடாது. அதுபோல வெளியூரில் இருப்பவர்கள், சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் இடம்பெறக் கூடாது. அதே பூத்தில் வசித்து வாக்காளர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் பூத் கமிட்டிகளில் இடம்பெற வேண்டும். விலை போகாதவர்கள், வெறித்தனமாக கட்சி வேலை செய்பவர்கள்தான் எனக்கு பூத் கமிட்டிகளில் வேண்டும். இன்னும் 3 மாதங்களில் முழுமையாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.
நமது கட்சி மிக உறுதியாக இருக்கிறது. அண்மையில் நாம் திமுக அரசை எதிர்த்து நடத்திய ஆர்பாட்டங்கள் பற்றி ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்தேன். பேரூராட்சி அளவில் கூட ஆர்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. தொண்டர்களும் மக்களும் திரண்டிருக்கிறார்கள். இவ்வளவு பலத்தோடு நாம் இருக்கிறோம். எனவே கோர்ட்டில் என்னாகுமோ ஏதாகுமோ என்று சந்தேகப்படாதீர்கள். அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மத்திய அரசு அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களிலோ இந்த வழக்கிலோ எந்த தலையீடும் செய்யவில்லை. நாம் சட்ட ரீதியாக வெற்றிடைவோம். எனவே அதுபற்றி கவலைப்படாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
கூட்டணி பற்றி உரிய நேரத்தில் நாம் முடிவெடுப்போம். அதுவரை கூட்டணி பற்றி பொது இடங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசாமல் இருங்கள். அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பேசுங்கள். திமுக அரசின் வேதனைகளைப் பேசுங்கள். கூட்டணி பற்றி இப்போது எதுவும் பேசவேண்டாம். போய் உங்கள் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக மக்களோடு கொண்டாடுங்கள்’ என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
தமிழருக்கு பணி நியமனம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!
தமிழகத்தில் மாற்றம் நிகழும்: ஜெ.பி.நட்டா