அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக அறியப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தின் சுய விவரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை அகற்றி, தன்னை தலைமை நிலைய செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக எடப்பாடியின் முன்கூட்டிய ஆலோசனையோடு சி.வி. சண்முகமும், கே.பி. முனுசாமியும் பொதுக்குழுவில் அடுத்தடுத்து அறிவித்தனர். தீர்மானங்கள் எதுவும் பொதுக்குழுவின் முன், வைக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டது எப்படி என்று பன்னீர்செல்வம் தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தேர்தல் ஆணையத்துக்கும் இதை பன்னீர் செல்வம் கடிதமாக அனுப்பியுள்ளார்.
பொதுக்குழு அரைமணி நேரத்தில் முடிந்த சில நாட்களிலேயே… ‘23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன’ என்று சி.வி. சண்முகம் அறிவித்தார். மேலும் அதிமுக அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு எடப்பாடி அழைப்பு விடுத்த கடிதத்திலும் தலைமை நிலையச் செயலாளார் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.,
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு சின்னம் வழங்குவது தொடர்பாக பன்னீர் செல்வம் தனக்கு எழுதிய கடிதத்துக்கு நேற்று பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதிய கடிதம் செல்லத் தக்கதல்ல’ என்று தெரிவித்திருந்தார். அந்தக் கடிதத்திலும் தன்னை தலைமை நிலையச் செயலாளர் என்றே எடப்பாடி குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே இன்று (ஜூலை 1) தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளார் என்பதை தனது பழைய பதவியான தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன்மூலம் இனி பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அல்ல என்பதையே சொல்லாமல் சொல்கிறார் எடப்பாடி.
ஆனால் அதிமுக சீனியர்களோ, “2021 ஜனவரி 9 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டனர். எனவே 2022 பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன என்றால்… அதற்கு முந்தைய பொதுக்குழுவில் இருந்த நிலையே தொடரும். அதாவது ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கிறார்கள்.
ஆனால் தற்போது பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதை அழுத்தமாக சொல்வதற்காகவே எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை துறக்கும் வியூகத்தை வகுத்துள்ளார்.
அப்படியானால் வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைத் தவிர மற்ற பதவிகளுக்கு நடத்தப்பட்ட உட்கட்சித் தேர்தல்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுமா… அது சட்டப்படி சரியாகுமா?” என்கிறார்கள்.