Edapadi Palanisamy Political Situation

இருதலைக் கொள்ளி எறும்பு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை    

மதுரையில் மாநாடு நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு தானே அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர், அதன் மூன்றாவது ஏகபோக தலைவர் என்று நிறுவும் பொருட்டு பெரும் செலவில் மாநாட்டைக் கூட்டியுள்ளார். மாநாட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள். அது வெற்றியா, இல்லையா என்பது போன்ற அலசல்களைத் தாண்டி, அவர் ஒற்றைத் தலைமையை அடிக்கோடிடும் முயற்சியைச் செய்து காட்டியுள்ளார்.

அவருடைய போட்டியாளர்களான ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை விட கட்சி கட்டமைப்பிலும், செல்வாக்கிலும் அவரே வலுவாக இருப்பதைக் காட்டியுள்ளார். கட்சி தலைமையைக் குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், இப்போதைக்கு அ.இ.அ.தி.மு.க அவர் வசமே உள்ளது என்ற எண்ணம் நிலைபெற்றுள்ளது எனலாம்.  

அவருக்கு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி போல புரட்சித் தமிழர் என்று பட்டம் வேறு கொடுத்துள்ளார்கள். இதெல்லாம் அரசியலில் நடக்கக் கூடியதுதான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் பழனிசாமி அரசியலில் இருதலைக் கொள்ளி எறும்பாகச் சிக்கியுள்ளார்.

கொள்ளிக் கட்டை என்பது நெருப்பு பற்றக்கூடிய விறகு அல்லது அது போன்ற ஒரு மரக்குச்சி. அதன் நடுவே ஒரு எறும்பு ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரு முனைக்குச் செல்லும்போது அங்கே தீ பிடித்திருப்பதைப் பார்க்கிறது. உடனே மற்றொரு முனைக்குச் சென்றால் அங்கேயும் தீ பிடித்துள்ளது. கொள்ளிக் கட்டையின் இரு முனைகள் அல்லது தலைகளிலும் தீ பிடித்துள்ளதால் முழு கட்டையும் விரைவில் எரிந்துவிடும். அந்த எறும்பின் நிலை பெரும் இக்கட்டில் இருக்கிறது. அதுதான் இருதலைக் கொள்ளி எறும்பு.

அரசியலில் சித்தாந்த ரீதியாக நேரெதிர் நிலை எடுத்துவிட்ட தி.மு.க-வும், பாஜக-வும் இரு புறமும் பற்றி எரியும் நெருப்பாக இருக்க இடையில் மாட்டிக்கொண்ட எறும்பு போல தவிக்கிறார் பழனிசாமி. நூறாண்டுக் காலமாக ஆரியத்தை எதிர்த்து வளர்ந்த திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்று பாஜக-வை அகில இந்திய அளவிலும் எதிர்த்து கூட்டணி அமைத்து போராடுகிறது தி.மு.க. தமிழகத்தில் பாஜக ஒரு சிறிய கட்சிதான் என்றாலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றியத்தை ஆளப்போவது பாஜக-வா, இந்தியா கூட்டணியா என்பதை தீர்மானிப்பதுதான்.

தமிழ்நாட்டில் தானும் ஒரு திராவிட கட்சிதான் என்று உரிமை கொண்டாட விரும்பும் பழனிசாமியால் மடியில் கனத்தால் தமிழ்நாட்டில் பலவீனமான பாரதீய ஜனதாவை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை. ஏனெனில் பாஜக ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ளது. சரி, பாஜக-வுடனேயே சித்தாந்த ரீதியாகவும் இணைந்துவிடலாம் என்றால் அது தி.மு.க-விடம் தமிழ்நாட்டை மொத்தமாக  ஒப்படைத்து விட்டதற்கு சமமாகிவிடும் என்பதுடன் பாஜக அ.இ.அ.தி.மு.க-வை விழுங்கி உட்செரித்துவிடும். அதுதான் அரசியலில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை. இந்த நிலையை முழுமையாக புரிந்துகொள்வது அவசியம்.

When did Annadurai take oath as the Chief Minister of Tamil Nadu? - Quora

அ.இ.அ.தி.மு.க வரலாறு

தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த 1967ஆம் ஆண்டுக்கு இரண்டாண்டுகள் பிறகு இந்திய அரசியலில் பல முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளந்து இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸும், காமராஜ் உள்ளிட்ட சிண்டிகேட் என்று அழைக்கப்பட்ட பல மூத்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் சிண்டிகேட் காங்கிரஸ் அல்லது பழைய காங்கிரஸும் இயங்கத் தொடங்கின. தமிழகத்தில் அறிஞர் அண்ணா மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தி இயற்கை எய்தினார். கலைஞர் முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

தி.மு.க-வின் நீண்ட நாள் லட்சியமான வங்கிகளை தேசியமாக்குவது போன்ற முற்போக்கு நடவடிக்கைகளை இந்திரா காந்தி மேற்கொண்டதால், தி.மு.க பழைய காங்கிரஸை விட இந்திரா காங்கிரஸுக்கு நெருக்கமாக இருந்தது. அதனால் 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலையும் இந்திரா காங்கிரஸுடன் இணைந்து எதிர்கொண்ட தி.மு.க மகத்தான வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 23 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 9 இடங்களிலும், பிற கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற, எதிர்த்தரப்பில் காமராஜர் ஒருவர் மட்டுமே நாகர்கோயில் தொகுதியில் வெற்றி பெற்றார். சட்டமன்றத் தேர்தலிலோ தி.மு.க 184 தொகுதிகளில் வென்றது. கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற்றது.    

தி.மு.க-வின் இந்த வெற்றி இந்திய பெருந்தேசியவாதிகளுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்தது. அதற்கேற்றாற்போல கட்சிக்குள் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் சில முரண்பாடுகள் தோன்றின. எம்.ஜி.ஆர் கட்சியைப் பிளந்து 1972ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க என்ற கட்சியை அண்ணாவின் பெயரால் தொடங்கினார். பின்னர் அதை அகில இந்திய அண்ணா தி.மு.க என்று பெயர் மாற்றம் செய்தார். இந்த பிளவினால் திராவிட இயக்கம் வலுவிழந்து, மீண்டும் காங்கிரஸ் வலுப்பெற்றுவிடும் என்று இந்திய பெருந்தேசியவாதிகள் நினைத்ததற்கு மாறாக, தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒன்று தி.மு.க-வுக்கு அல்லது அ.இ.அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தொடங்கினார்கள். எழுபது முதல் எண்பது சதவிகித வாக்குகளை இந்த இரு மாநிலக் கட்சிகள் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதில், இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாடு புதுப்பாதை அமைத்தது.  

தி.மு.க கடவுள் மறுப்பை ஒரு கொள்கையாக ஏற்காவிட்டாலும், பெரியாரின் பகுத்தறிவு நோக்கினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும், மதச்சார்பின்மையையும் முக்கியமான கொள்கைகளாகப் பயின்றது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே இந்த அம்சங்களில் நெகிழ்வினை காட்டத் தொடங்கிய அ.இ.அ.தி.மு.க பின்னர் ஜெயலலிதா தலைமையேற்ற பிறகு வெளிப்படையாகவே பார்ப்பனீய வழிபாட்டு, கலாச்சார அம்சங்களை அனுசரிக்கத் தொடங்கியது. அரசியல் ரீதியாக தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மாநில சுயாட்சிக்குக் கொடுத்த அழுத்தமும், அ.இ.அ.தி.மு.க சமரச அரசியலால் தேக்கமடைய நேர்ந்தது.

இவ்வாறான சித்தாந்த விலகல்கள் இருந்தாலும், தேர்தல் அரசியலில் தி.மு.க-வை எதிர்த்து களமாட வேண்டியிருந்ததால் அ.இ.அ.தி.மு.க-வினால் இட ஒதுக்கீடு, சமூக நீதி, மக்கள் நலத் திட்டங்கள் போன்றவற்றில் தி.மு.க-வின் சித்தாந்த அடிப்படைகளைத் துறக்க இயலவில்லை. அதனால் ஒருபுறம் திராவிட கட்சியாகவும், மறுபுறம் பார்ப்பனீய, இந்திய தேசிய கூறுகளுடன் சமரசமாகவும் நிலத்திலும், நீரிலுமாக வாழும் உயிரினமாக அ.இ.அ.தி.மு.க-வின் அரசியல் குணாதிசயம் அமைந்தது.

Edapadi Palanisamy Political Situation

சித்தாந்த உறுதியும், தனி நபர் கவர்ச்சியும்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சித்தாந்த வலிமையை எதிர்கொள்ள, அ.இ.அ.தி.மு.க எம்.ஜி.ஆரின் காரிஸ்மா என்று ஆங்கிலத்தில் கூறப்படும் தனிநபரின் கவர்ச்சிகர ஆளுமையையே நம்பியிருந்தது. தி.மு.க-வின் அங்கமாக அவர் திரைப்படங்களில் அதன் கொள்கைகளைப் பேசி நடித்ததன் மூலம், தன்னை தி.மு.க-வின் கதாநாயக பிம்பமாக உருவாக்கிக் கொண்டார். அதனால் அவர் திரைப்படங்களால் கவரப்பட்ட இளைஞர்கள், பெண்கள் அவரை தி.மு.க கொள்கைகளின் உருவகமாக நினைக்கத் தலைப்பட்டார்கள். அதனால் அவருடைய தனி நபர் ஈர்ப்பையே, கவர்ச்சியையே அ.இ.அ.தி.மு.க பெரிதும் நம்பியிருந்தது. 

அவருக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவும் திரையில் அவரது இணையாக தோன்றியதன் அடிப்படையிலே, கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக அவரால் நியமிக்கப்பட்டதன் காரணமாக, அவரது அரசியல் வாரிசாக தன்னை நிறுவிக் கொண்டார். அவருக்கும் கரிஸ்மா என்பது சாதகமாக இருந்தது. மக்களை பெருமளவில் ஈர்க்கும் திறன் பெற்றிருந்தார். நடுவில் பல தவறுகள் செய்தாலும், தி.மு.க-வுக்கு மாற்று என்ற இட த்தில் அ.இ.அ.தி.மு.க நிலைபெற்றுவிட்டதால் சுதாரித்துக்கொண்டு, தன் மக்கள் செல்வாக்கின் வலிமையில் அரசியலை முன்னெடுத்து வந்தார்.

அவர்கள் இருவருடைய வாரிசாக தன்னை நிறுவிக்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எந்த வரலாற்றுப் பின்புலமும் இல்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் அவர் கட்சியில் அறியப்பட்டவர் இல்லை. ஜெயலலிதா காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராகப் பதவி வகித்தாலும் மக்கள் மத்தியில் கட்சியின் தலைவராக அறியப்பட்டிருக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கிடையே சசிகலா அவரை முதல்வராக்கிய போதுதான் அவர் பெயரையே பலரும் அறிய நேர்ந்தது. அடுத்த நான்காண்டுகள் அவர் எப்படியோ முதல்வராகத் தாக்குப் பிடித்தாலும், தேர்தல்களில் கட்சிக்கு வெற்றியை ஈட்டித்தர அவரால் முடியவில்லை.

ஆனால் தி.மு.க-வுக்கு மாற்றாக, எதிராக வேர்மட்ட அளவில் உருவாகிவிட்ட கட்சி  அமைப்பு மற்றும் வாக்கு வங்கி உடனடியாக முற்றிலும் காற்றில் கரைந்து போகாது. அதனால் தொண்டர்கள் என்ற அளவிலும், மக்கள் ஆதரவு என்ற அளவிலும் கட்சி தொடர்ந்து நீடிக்கத்தான் செய்யும். ஆனால், இந்திய தேர்தல் முறையில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெறும் கட்சியே வெற்றி பெறும். ஒரு சதவிகித வாக்கு குறைவாக இருந்தாலும் வெற்றி கிட்டாது என்னும்போது எதை வைத்து பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவது என்பதே கேள்வி.

திராவிட சித்தாந்தத்தை அழிக்கத் துடிக்கும் பாஜக-வுக்கு எதிராக தி.மு.க அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை அமைப்பதில் முன்னிற்பதுடன், மாநில உரிமைகளுக்காக அனுதினமும் போராடி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க-வுடன் போட்டியிட வேண்டுமென்றால், தி.மு.க-வை விட தீவிரமாக திராவிட சித்தாந்த அரசியலைப் பேசி, பாஜக-வை எதிர்க்க வேண்டும். அது பழனிசாமிக்கு  சாத்தியமில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல நீரிலும், நிலத்திலும் வாழ மக்களை ஈர்க்கும் காரிஸ்மா எதுவும் அவரிடம் இருப்பதாக இதுவரை புலனாகவில்லை. முன்னைவிட கோர்வையாகப் பேசினாலும், பேச்சில் அரசியல் கருத்தியல் எதுவும் இல்லை. நாட்டில் பற்றியெறியும் எந்த பிரச்சினை குறித்தும் எதுவும் அவரால் பேச முடிவதில்லை. மோடியை புகழவும் முடியவில்லை; எதிர்க்கவும் முடியவில்லை. தேசிய அரசியலையே பேசாமல் எப்படி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியும்?

Edapadi Palanisamy Political Situation

பாஜக பகை உறவு      

பாரதீய ஜனதா கட்சியும் பழனிசாமியை வாட்டி எடுக்கிறது. அதற்குத் தேவைப்பட்டால் டெல்லிக்கு அழைத்து பிரதமருக்கு அருகில் அமர்த்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவராக புகைப்படங்களை எடுத்து விளம்பரப்படுத்துகிறது. கூடவே, அதன் மாநில தலைவர் அண்ணாமலையை மட்டம் தட்ட வைத்து சிறுமைப்படுத்துகிறது. 

நிச்சயம் சென்ற தேர்தலைப் போல பாஜக நான்கு அல்லது ஐந்து தொகுதிகளுடன் திருப்தியடையப் போவதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால்தான் அந்த எண்ணிக்கைக்கு மதிப்பு இருக்கும். வெற்றி வாய்ப்பு குறைவு என்றால், நிற்கும் தொகுதிகளையாவது அதிகப்படுத்த நினைப்பதே வளரத் துடிக்கும் கட்சியின் இயல்பு. அப்படி பழனிசாமி அதிக தொகுதிகளை கொடுக்காவிட்டால், பாஜக பன்னீர்செல்வம், டிடிவி, பாமக, தேமுதிக என்று கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் சாத்தியம் பிரகாசமாகவே இருக்கிறது. வெற்றி பெற முடியாவிட்டாலும், தன்னுடைய இருப்பை பெரிதுபடுத்திக் காட்டிக்கொள்ள பாஜக-வுக்கு அது உதவக்கூடும். எப்படியாவது அ.இ.அ.தி.மு.க வாக்குவங்கியை சிதைத்து தன்வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பாஜக-வின் விருப்பம், லட்சியம் வெளிப்படையானது. பள்ளிச் சிறுவர்களுக்கும் புரியக் கூடியது.   

இந்த இக்கட்டை சமாளிக்க ஒருவேளை பாஜக-வுக்கு கணிசமான தொகுதிகளைத் தர பழனிசாமி முன்வந்தால் அதை நியாயப்படுத்துவது சாத்தியமேயில்லை. முதலில் அவர் ஏன் பாஜக-வுடன் கூட்டணி வைக்கிறார் என்பதே ஒரு புதிர்தான். ஏனெனில் ஒரு நல்ல கூட்டணிக்கு கருத்தியல் ஒற்றுமை இருக்க வேண்டும். சரி, அது அமையவில்லை, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூட்டணிதான் என்றால், அது தேர்தல் வெற்றிக்காவது உதவ வேண்டும். கருத்தியல் ஒற்றுமையும் இல்லாத, தேர்தல் வெற்றிக்கும் உதவாத பாஜக-வுடன் பழனிசாமி கூட்டணி வைப்பது எதனால் என்ற கேள்விக்கே அவரால் சரியான விளக்கம் தர முடியாது.

நீட் எதிர்ப்பும், எழுச்சி மாநாடும்  

இந்தக் குழப்பங்களால் பழனிசாமி அரசியல் முடிவுகளை எடுப்பதில் தடுமாறிப் போகிறார். அவருடைய மாநாடு அவருக்கு ஓர் அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏனெனில் அதே தினத்தில், தி.மு.க மாநிலம் முழுவதும் நீட் தேர்விலிருந்து விலக்கினைக் கோரி போராட்டங்களை நிகழ்த்தியது. பழனிசாமி மாநாட்டில் “நீட் தேர்விலிருந்து விலக்கினை அளிக்க ஒன்றிய அரசினை அ.இ.அ.தி.மு.க கேட்டுக்கொள்கிறது” என்று ஒரு தீர்மானத்தைப் போட்டிருந்தால், உரத்த குரலில் முழங்கியிருந்தால், அது தி.மு.க-விற்கு இணையாக மாநில நலனில், சுயாட்சியில் அக்கறையுடன் இருப்பதாகப் பதிவாகியிருக்கும். பாஜக-வுடன் தொகுதி பங்கீட்டு பேரத்துக்கும் கூடுதல் ஆகிருதியைக் கொடுத்திருக்கும்.

ஆனால், பழனிசாமி தி.மு.க-வின் மீது அபத்தமாக பழி போடுவதில் காட்டும் ஆர்வத்தை. நேர்மறையாக சித்தாந்த அரசியல் செய்வதில் காட்டுவதில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதில் ஓர் அரசியல்வாதிக்கு கவனம் இருக்க வேண்டும். நாங்கள் பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி வைத்தாலும், மாநில நலனை வலியுறுத்துவோம் என்பதை நேர்மறையாக பதிவு செய்ய வேண்டாமா? ஒரு தீர்மானம் போடுவதால் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது? இந்த பலவீனத்தை தன் வெளிப்படையான அறைகூவல் மூலம் சரியாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  

பழனிசாமி கட்சி நடத்துவதாக நினைக்கிறாரா, கம்பெனி நடத்துவதாக நினைக்கிறாரா என்று தெரியவில்லை. பாஜக-வுடன் தொகுதி பேரத்தில் கறாராக இருந்துவிட்டால் போதும், கருத்தியல் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே அரசியல் விழிப்புணர்வு அதிகமாகப் பரவியுள்ள மாநிலம் தமிழ்நாடு என்று அமித் ஷாவே கூறுகிறார். அதைக்கேட்டாவது பழனிசாமி விழித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் புரட்சித் தமிழனா, புரட்டுத் தமிழனா என்று மக்கள் கேட்டுவிடுவார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:  

Edapadi Palanisamy Political Situation by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

கிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு – கேரட் தோசை

ஆளுநரின் தொகுதி: அப்டேட் குமாரு

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் உருவாக்கம்!

+1
0
+1
1
+1
0
+1
8
+1
1
+1
0
+1
1

Comments are closed.