டிஜிட்டல் திண்ணை: டெல்லி மெசேஜ்- எடப்பாடி ரிட்டர்ன், பொதுக்குழுவை கூட்டும் பன்னீர்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் யூட்யூபில் டெல்லியில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி லிங்க் விழுந்தது.  அதைப் பார்த்துவிட்டு மெசேஜ் டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்

“போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு என்று ஒரு பழமொழி கிராமங்களில் உண்டு. அதுபோல அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு போனவர், மோடிக்கும் அமித் ஷாவுக்கும் வாங்கி வைத்திருந்த பொக்கேவை மீண்டும் சென்னைக்கே கொண்டு வந்துவிட்டார் என்று அதிமுக நிர்வாகிகளே பேசத் தொடங்கி விட்டனர்.

ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக பிரகடனப்படுத்தினார். ஓ பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். அன்று முதல் பன்னீர் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் அதிமுக தலைமை கழக வாசலில் வன்முறை, சட்டப் போராட்டம், வார்த்தை போர் என்று பல்வேறு வகைகளில் யுத்தம் தீவிரமானது.  

நான் தான் பொருளாளர் என்று பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை வங்கிகள் நிராகரித்திருந்தன. அதிமுக தலைமை கழகம் சீல் வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இப்படி அடுத்தடுத்து தங்களுக்கு கிடைத்த சாதகங்களால் எடப்பாடி தரப்புக்கு மேலும் தெம்பு அதிகமானது. 

பொதுக்குழு கூட்டத்துக்கு பின் ஒற்றை தலைமையாக உருவெடுத்த எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டிகள் முன்பை விட ஆவேசமாகவும் உறுதியாகவும் இருந்தன. இதற்கிடையே பன்னீர்செல்வம் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். 

இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவதை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் பிரிவு உபச்சார விருந்து ஒன்றை 22 ஆம் தேதி அளித்தார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அதில் கலந்து கொண்டார். அந்த விருந்தில் மோடியை பொதுவாக சந்திக்க முடிந்தது.

22 ஆம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி 25 ஆம் தேதிவரை அங்கே இருந்து விட்டு பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோரை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார்.  கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமி, அவரது தரப்பினரான முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் எடப்பாடியின் இந்த டெல்லி பயணத்துக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது. மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற பிறகு டெல்லி சென்று மோடியை சந்தித்து பன்னீர் தரப்புக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தவும் எடப்பாடி நினைத்திருந்தார்.

எடப்பாடி டெல்லி சென்ற நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அவரால் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார், ‘மத்திய அரசு எடப்பாடியாரை தான் அங்கீகரிக்கிறது.  அதனால்தான் குடியரசுத் தலைவர் பிரிவு உபசார நிகழ்வுக்கு எடப்பாடி அழைக்கப்பட்டிருக்கிறார்’ என்று சொல்லி பாஜகவின் மோடியின் ஆதரவு தங்களுக்கே என்று மறைமுகமாக குறிப்பிட்டார்.

இதற்கிடையே கொரோனா தொற்றால் மருத்துவமனையில் இருந்தபடியே பன்னீர் செல்வம் தனது டெல்லி பாஜக சோர்ஸ்களை தொடர்பு கொண்டு அதிமுகவின் தற்போதைய நிலவரம் பற்றி பேசியிருக்கிறார்.

‘கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமித்ஷா லீலா பேலஸ் ஹோட்டலில் நள்ளிரவு வரை தங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நான் (பன்னீர்) அமித்ஷாவிடம் சில முக்கிய விஷயங்களை தெரிவித்தேன். அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் ஒன்று சேர்த்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களுக்கு சசிகலா பிடிக்காது என்றால் திமுக ஆட்சிக்கு வர அனுமதிப்பீர்களா? சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணையா விட்டாலும் அதிமுக கூட்டணியிலாவது இணைந்து தேர்தலை சந்தித்தால் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் வரும். திமுகவை அப்புறப்படுத்தி விடலாம் என்று அன்றே நான் அமித்ஷாவிடம் தெரிவித்தேன். 

எனது கோரிக்கையில் இருக்கும் உண்மையையும் அரசியல் நிலவரத்தையும் புரிந்து கொண்ட அமித்ஷா இதுபற்றி எடப்பாடியிடம் பேசியிருக்கிறார். ஆனால் எடப்பாடியோ சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எந்த பலமும் இல்லை. இரட்டை இலைக்கு தான் உண்மையான பலம் இருக்கிறது. எனவே நாம் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று அமித்ஷாவிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி விட்டார்.  தேர்தல் முடிவுகள் என்ன ஆனது?’ என்று கேட்ட பன்னீர் செல்வம் மேலும்…  

’ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் என் மீது தாக்குதல் நடத்துவதற்கு எடப்பாடி ஆதரவாளர்கள் வந்தனர். ஆனால் நான் கட்சி பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்து வந்துவிட்டேன். ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் என்னைப் பற்றி மிக மிக அவதூறான கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் எடப்பாடி. அதிமுகவின் வரலாற்றில் இதுபோன்று நடந்ததே இல்லை. இப்போது டெல்லி வந்து அவரும் அவர் அமைச்சரவை சகாக்களும் எதிர்கொண்டிருக்கும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பார்க்கிறார். 

எடப்பாடி பழனிசாமி அன்று ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை எதிர்க்கட்சியாக மாற்றினார். அதே எடப்பாடி பழனிச்சாமியால் இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மேலும் பிரிவுகளாகி நிற்கிறது. இதே நிலை தொடர்ந்தால் வரும் எம்பி தேர்தலில் மீண்டும் திமுகவே ஆதாயம் அடையும். எடப்பாடி பழனிச்சாமி குறுகிய அரசியல் செய்கிறார்’ என்றெல்லாம் பன்னீர்செல்வம் தனது டெல்லி நண்பர்களிடம் பேசியிருக்கிறார்.

அதற்கு டெல்லியில் இருந்து கிடைத்த பதிலின் அடிப்படையில் தான் அதிரடியாக சில நடவடிக்கைகளில் இறங்கினார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவில் உருவாக்கப்பட்டு பின்பு அகற்றப்பட்ட தொகுதி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பதவிகளை மீண்டும் உருவாக்குவதாக அறிவித்தார். அதிமுக வங்கி கணக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினார்.  அடுத்ததாக இன்று ஜூலை 24ஆம் தேதி புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதே நேரம் டெல்லியில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோரின் தனிப்பட்ட முறையிலான சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்காததால் இன்று காலையிலேயே சென்னைக்கு புறப்பட்டு விட்டார்.

இடைக்கால பொதுச்செயலாளர் பதவி ஏற்று கொண்டதில் இருந்து உறுதியாகவும் திடமாகவும் தனது உடல் மொழியை வெளிப்படுத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை டெல்லி தமிழ்நாடு பவனில் செய்தியாளர்களை சந்திக்கும் போது சற்று சோர்வாக தான் காணப்பட்டார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு,  ‘நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அது பற்றி இப்போது பேச முடியாது. அருள் கூர்ந்து உட்கட்சி விவகாரம் பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்கவேண்டும்’  என்று தனது தொனியை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திலும் கூட்டத்துக்கு பிறகும் பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமி பொதுவெளிகளில் தாக்கி பேசிய போதும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் தான் இருந்தன. அப்போதெல்லாம் பேசிய எடப்பாடி இப்போது டெல்லியில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்க காரணம் என்ன என்பதுதான் அதிமுகவினர் மத்தியில் விவாதமாக இருக்கிறது.

இதற்கிடையே பன்னீர்செல்வத்துக்கு டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட சில உத்தரவாதங்களின் படி தான் அவர் அடுத்தடுத்து புதிய நிர்வாகிகள் நியமனங்களை அறிவித்து வருகிறார். இன்னமும் அறிவிக்கவும் இருக்கிறார். 

விரைவில் சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் வானகரத்திலோ அல்லது வேறொரு இடத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கூட்டுவதற்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார் ஓ.  பன்னீர்செல்வம். அதற்காகத்தான் இப்போது புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் டெல்லி அறிவுறுத்தலின் பேரில் உட்கட்சி விவகாரம் பற்றி தற்போதைக்கு பேச வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார் எடப்பாடி. 

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை என்று அதன் தமிழக தலைவர் அண்ணாமலை சொல்லிக் கொண்டிருந்தாலும்… எடப்பாடியின் இந்த டெல்லி விசிட் மூலம் அதிமுகவுக்குள் பாஜகவின் தலையீடு பெருமளவு இருக்கிறது என்பதை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 

சில நாட்களாக சற்று சோர்ந்து இருந்த பன்னீர் தரப்பு தற்போது அடுத்தடுத்த காய் நகர்த்தல்களை அதிரடியாக மேற்கொள்ள தொடங்கியுள்ளது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

.

+1
3
+1
6
+1
1
+1
13
+1
1
+1
3
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *