வைஃபை ஆன் செய்ததும் திமுக கூட்டணித் தலைவர்களின் பேட்டி ஓடிக் கொண்டிருந்தது. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுக-பாஜக கூட்டணி முறிவு அதிகாரபூர்வமாகவும் எழுத்துபூர்வமாகவும் செப்டம்பர் 25 ஆம் தேதி அதிமுகவால் அறிவிக்கப்பட்டது. அன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது வெளியிடப்பட்டது. அதன் பின் அதாவது அதிமுக, பாஜக இரு தரப்புமே கூட்டணி முறிவுக்குப் பின் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன் வைக்கவே இல்லை.
25 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் வாட்ஸ் அப் குரூப்பில், ‘அஇஅதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க மாநில மூத்த தலைவர்களிடம் கருத்து கேட்டால் தேசிய தலைமை இது குறித்து முறையான அறிவிக்கை வெளியிடும். அதன் பிறகே எங்கள் கருத்துகளை கூற இயலும் என்று மட்டும் கூறவும். யாரும் யாரை திட்டியும் குறை கூறியும் எந்த அறிக்கையும் வெளியிட வேண்டாம் என மாநில தலைவர் வலியுறுத்தல்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு, ‘பாஜக பற்றியோ அண்ணாமலை பற்றியோ இனிமேல் ஊடகங்களில் பேசவேண்டாம்’ என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதன்படி இரு தரப்புமே ஒருவரை ஒருவர் தாக்காமல் அமைதி காத்தனர். கூட்டணியில் இருக்கும்போது அதிமுகவும், பாஜகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். ஆனால் கூட்டணி இல்லை என்று ஆன பிறகு இப்படி அமைதியாகிவிட்டார்கள். இது வித்தியாசமாக மட்டுமல்ல, முரண்பாடாகவும் இருக்கிறது.
அதிமுக முன்பை விட இப்போதுதானே அதிகமாக அண்ணாமலையை விமர்சிக்க வேண்டும்? அண்ணாமலையும் முன்பை விட இப்போதுதானே அதிமுகவினரை தாக்க வேண்டும்? ஆனால் இரண்டும் நடக்காதது இயல்பாக இல்லையே என்று இரு கட்சிகளின் வட்டாரத்திலும் பேசும்போது இதற்கான காரணம் தெரியவந்தது.
‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தமிழ்நாடு முழுதும் தனியார் நிறுவனம் ஒன்றை வைத்து ஒரு சர்வே நடத்தினார். அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலை சந்தித்தால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் அந்த சர்வே. அந்த சர்வேயில் பாஜகவோடு அதிமுகவின் கூட்டணியை அதிமுக தொண்டர்களும் விரும்பவில்லை, பொது மக்களும் விரும்பவில்லை என்று தெரிந்தது. பாஜகவோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் 2019, 2021 பொதுத் தேர்தல் போல அதிமுகவுக்கு தோல்விதான் கிடைக்கும் என்றும், சிறுபான்மை ஓட்டு ஒரு சதவிகிதம் கூட அதிமுகவுக்கு விழாது என்றும் அந்த சர்வேயில் தெரியவந்தது.
இந்த நிலையில்தான் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத அதிமுக தலைமையிலான அணி அமைய வேண்டும் என்று எடப்பாடி முடிவெடுத்திருக்கிறார். இதை டெல்லியில் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பாஜக தலைவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கிடையே அண்ணாமலை பிரச்சினையும் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது அவருக்கு வசதியாகிவிட்டது.
‘2024 பொதுத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்தால் ஒரு சீட்டும் கிடைக்காது. அதேநேரம் அதிமுக தனியாக நின்றால் திமுக அரசின் எதிர்ப்பு வாக்குகளை திரட்டுவதில் வெற்றி கண்டு கணிசமான இடங்களைப் பெற முடியும். அவ்வாறு வெற்றி பெறும் அதிமுக எம்பிக்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் தேவைப்பட்டால் மோடி பிரதமர் ஆவதற்கே ஒத்துழைப்பார்கள்’ என்ற தகவலை டெல்லி பாஜக தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டார் எடப்பாடி. எனவேதான் பாஜகவை தாக்கி அதிமுகவோ, அதிமுகவை தாக்கி பாஜகவோ விமர்சனங்களை முன் வைக்கவில்லை என்கிறார்கள்.
மேலும் வரப் போகிற தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று அணிகள் அமைந்தால் திமுக மோடி மீண்டும் வரக் கூடாது என்று சொல்லி பிரச்சாரம் செய்யும், பாஜக அணி மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்யும். அதிமுக என்ன பிரச்சாரம் செய்யும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு 2014 பொதுத் தேர்தலையே முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. அந்த தேர்தலில் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளர் என்று அதிமுகவினர் கூறி பிரச்சாரம் செய்தனர். ஆனால் ஜெயலலிதா அவ்வாறு எங்கேயும் கூறிக் கொள்ளவில்லை.
அதேநேரம் தமிழ்நாட்டின் உரிமைகளை போராடிப் பெற கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தவறி விட்டது. அதிமுக வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு தேவையான உரிமைகளை போராடிப் பெறுவோம்’ என்று கேட்டுதான் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய இரு தொகுதிகளைத் தவிர மற்ற 37 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெற்றது.
இப்போதும் அந்த ஃபார்முலாவையே பின்பற்றுகிறார் எடப்பாடி. அதாவது தமிழ்நாட்டின் உரிமைகளை போராடி பெறுவதற்கு அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் எடப்பாடியின் பிரதான கோஷமாக இருக்கப் போகிறது. அதனால்தான் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதை விட்டுவிட்டு…மக்களவைத் தேர்தல் மூலம் இங்கே நடக்கும் திமுக ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள் என்ற பிரச்சார உத்தியை முன்னெடுக்கப் போகிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.