டிஜிட்டல் திண்ணை: டிசம்பருக்குள் துரைமுருகனை நோக்கி ED… டென்ஷன் ஸ்டாலின்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் மணல் விவகாரத்தில் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய தகவல் இன்பாக்சில் வந்து விழுந்தது. அதைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுதும் அரசு நடத்திய மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். மணல் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைத் தாண்டி பெருமளவுக்கு மணல் தோண்டி விற்பனை செய்யப்படுவதும், அதற்காக போலி ரசீதுகள், போலி க்யூ ஆர் கோடுகள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் புகார்கள் சென்றதை அடுத்து இந்த ரெய்டு நடந்தது. மணல் குவாரிகள் மட்டுமல்ல, மணல் தொழில் செய்யும் புதுக்கோட்டை எஸ்.ஆர்., திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடர்பான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதன் பின் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் குவாரிகள் தொடர்பாக சில விவரங்களைக் கேட்டனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். அப்போது நீர்வளத் துறை தலைமைப் பொறியாளரான முத்தையா ஆன்லைனில் இருக்கும் அனைத்து பதிவுகளையும் அமலாக்கத்துறைக்கு கொடுக்குமாறு செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பேரில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட விவரத் தகவல்கள் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது. அவற்றில் இருந்து தங்களுக்கு தேவையான விவரங்களை எடுக்க திணறிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தேவைப்படும் விவரங்களை மட்டும் குறிப்பிட்டுக் கேட்டனர்.

இதன் பின் நீர்வளத்துறை உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பினர். அதோடு அக்டோபர் மாதம் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரான முத்தையாவுக்கும் சம்மன் அனுப்பினார்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள். ஆனால் அப்போது முத்தையா லீவு போட்டுவிட்டு போய்விட்டார். இது நீர்வளத்துறைக்குள் சலசலப்பு அலைகளை ஏற்படுத்தியது.

அதன் பின் மீண்டும் பணிக்குத் திரும்பிய நிலையில் இன்று நவம்பர் 20 ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜாராகியிருக்கிறார் முத்தையா.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை அரசே நடத்திவரும் நிலையில் அதில் நடந்திருப்பதாக சொல்லப்படும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கும் துறை அமைச்சருமே பொறுப்பு என்ற அடிப்படையில்தான் அமலாக்கத்துறையினரின் நகர்வு அமைந்திருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரான முத்தையாவிடம் மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி, அதன் பின் துறை அமைச்சரான துரைமுருகனிடம் வரும் டிசம்பருக்குள் விசாரணை நடத்துவதே அமலாக்கத்துறையினரின் திட்டம். இதற்கிடையே ஒவ்வொரு மாவட்ட மணல் குவாரிகள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமும் விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
சில வாரங்களுக்கு முன்பே ஒரு மாலை நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனைத் தொடர்புகொண்டு, ‘அண்ணே உங்களைத் தேடி அமலாக்கத்துறை விசாரணைக்கு வரலாம்’ என்று எச்சரித்திருந்தார். இதை அமைச்சரவை கூட்டத்தில் கூட தனிப்பட்ட முறையில் அமைச்சர்களிடம் சொல்லிய ஸ்டாலின், எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மணல் விவகாரம் குறித்து விரைவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நெருங்கும் வகையில்தான், அத்துறையின் உயரதிகாரியான முத்தையாவை அமலாக்கத்துறை விசாரணை செய்திருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இதை முதலமைச்சர் சீரியசாக எடுத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பே அதாவது அமைச்சர் பிடிஆர் துறை மாற்றம் செய்யப்பட்டபோதே… துரைமுருகனிடம் இருந்து கனிம வளத்துறையை பறித்து அதை தங்கம் தென்னரசுவிடம் கொடுக்க தீர்மானித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் அப்போது முதலமைச்சரிடம் உரிமையாக பேசி அதைத் தடுத்துவிட்டார் துரைமுருகன். இதுகுறித்து ஜூலை 11 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை பகுதியில், ’வருத்தம்… வைராக்யம்… துரைமுருகன் -ஸ்டாலின் முற்றுகிறது மோதல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.  இப்போது நீர்வளத்துறைக்கு உள்ளிட்ட கனிமவளத்துறையால்தான் துரைமுருகனுக்கு மட்டுமல்ல தமிழ்நாடு அரசுக்கே பிரச்சினை. மணல்குவாரிகள் விவகாரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாயை மாநில அரசே தடுத்து இழப்பு ஏற்படுத்தியதாக தீவிரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை.  திமுக அமைச்சர்கள் பலரிடமும் இன்று இதுவே விவாதப் பொருளானது.

இந்த பின்னணியில்தான் நீர்வளத்துறை உயரதிகாரி முத்தையாவிடம் அமலாக்கத்துறையின் விசாரணை தொடர்பாக இன்று சீரியசாக சில ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அமைச்சர் துரைமுருகன் மீது அவருக்கு வருத்தம் குறையவில்லை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

”ஆளுநர் மீதான வழக்கில் பின்வாங்க மாட்டோம்”: அமைச்சர் ரகுபதி உறுதி!

2023 உலகக்கோப்பை கனவு அணியில் இடம்பிடித்த 6 இந்தியர்கள்!

+1
1
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0