சாதிப் பெயரை குறிப்பிட்டு விவசாயிகள் இருவருக்கு சம்மன் அனுப்பிய வழக்கை அமலாக்கத்துறை கைவிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கிருஷ்ணன் (71) மற்றும் கண்ணையன் (75). இருவரும் தங்களுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகள் இருவருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் விவசாயிகளின் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் ஆறு மாதங்களுக்கு பிறகு தற்போது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சாதிப் பெயரை குறிப்பிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நிலம் தொடர்பான பிரச்னை காரணமாக சேலம் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் குணசேகரனின் தூண்டுதலின் பேரிலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக, சகோதரர்கள் இருவரும் சேலம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர்.
நிர்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும்!
இந்தநிலையில், விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் முழு பொறுப்பு. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நேற்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கும், பாஜக மாவட்டச் செயலாளருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விவசாயிகள் குற்றம் செய்யாமல் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் நானே முதல் ஆளாக வந்து அமலாக்கத்துறைக்கு எதிராக அவர்களது விவசாய நிலத்தில் தர்ணா போராட்டம் செய்வேன்” என கருத்து தெரிவித்திருந்தார்.
விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது ஏன்?
தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள காட்டு எருமைகளை மின் வேலி அமைத்துக் கொலை செய்ததாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி விவசாயிகள் இருவர் மீதும் சேலம் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று, 2021 டிசம்பர் 28-ஆம் தேதி சேலம் ஆத்தூர் நீதிமன்றம் விவசாயிகள் இருவரையும் விடுதலை செய்தது.
The Wild Life Protection Act 1972-ன் படி பதிவு செய்யப்படக்கூடிய வழக்குகளை அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுக்க அதிகாரம் உள்ளது. அதன்படி காட்டு விலங்குகளை விவசாயிகள் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில், விவசாயிகள் மீதான வழக்குகளை முடித்து வைத்துவிட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறை விளக்கம்!
இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, “விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் இரண்டு காட்டு எருமைகளைக் கொன்றது தொடர்பாக, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 51 மற்றும் 9-ன் கீழ் இருவர் மீதும் சேலம் வனத்துறை 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இவை திட்டமிட்ட குற்றங்களாகும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி தமிழ்நாடு வனத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மீது மார்ச் 2022-ல் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) வழக்குப்பதிவு செய்தோம்.
நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வனவிலங்கு வழக்குகளைக் கண்காணிப்பதற்கான நிதி நடவடிக்கைக் குழுவின் ஆணையின்படி சமீபகாலமாக பல வனவிலங்கு வழக்குகளை விசாரணைக்கு எடுத்து வருகிறோம். அந்தவகையில் இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்தோம்.
பி.எம்.எல்.ஏ வழக்குகளில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையாக கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அன்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விவசாயிகளை விசாரிக்கவில்லை. விவசாயிகளுடன் ஆஜரான வழக்கறிஞர் பிரவீனா சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர், விவசாயிகள் இருவருக்கும் சம்மன் அனுப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் விவசாயிகளின் சாதிப் பெயர் குறிப்பிட்டது பற்றி அவர் கூறும்போது, “போலீஸ் அல்லது ஏஜென்சிகளிடம் இருந்து அமலாக்கத்துறை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது, வழக்கமாக அதே வார்த்தை பிரயோகத்தில் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அப்படித்தான் சாதி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு எழுத்தர் செய்த பிழை.
விவசாயிகள் மீதான வனவிலங்கு வழக்கில் சேலம் ஆத்தூர் நீதிமன்றம் சமீபத்தில் அவர்களை விடுதலை செய்ததை அறிந்த உடன், அவர்கள் மீதான பி.எம்.எல்.ஏ வழக்குகள் கைவிடப்பட்டது.
இது மிகவும் சிறிய வழக்கு. முதலில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கக் கூடாது. இதில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
சாதிப் பெயரை குறிப்பிட்டு விவசாயிகள் இருவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை அமலாக்கத்துறை கைவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்