டிஜிட்டல் திண்ணை: 22 தொகுதிகள்… செந்தில்பாலாஜி ஆபரேஷன் ஸ்டார்ட்…  சட்டென விழித்த ED

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை மூன்றாவது நாளாக ரெய்டு நடத்தும் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. ED third day raid TASMAC

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“மார்ச் 6 ஆம் தேதி காலை சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் தனியார் மது ஆலைகளின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடங்கியது. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதையெல்லாம் தாண்டி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் கட்டிடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமையகத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மது ஆலைகள் அலுவலகங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறையின் ரெய்டு இன்று (மார்ச் 8) மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மதுபான நிறுவனம், கூடுதலாக, கிரீம்ஸ் சாலையில் உள்ள SNJ டிஸ்டில்லரீஸின் தலைமையகம், ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள MGM மதுபான ஒப்பந்ததாரரின் வீட்டில் மூன்றாவது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூரில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள சிவா டிஸ்டில்லரியிலும் இதேபோன்ற சோதனைகள் நடைபெற்று வருகின்றன. E

அரசு மதுபானக் கடைகளில்  விற்கப்படும் மதுபானங்களை  தனியார் மதுபான ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. இதுபோல தமிழ்நாட்டில் 11 மதுபான  ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.  

இந்த ஆலையின் அலுவலகங்களில் இருக்கும் கணக்கும், டாஸ்மாக் தலைமையகத்தில் இருக்கும் கணக்கும் சரியாக இருக்கிறதா… டாஸ்மாக்கின் விற்பனை விவரங்கள் இவற்றோடு பொருந்திப் போகிறதா என்று அமலாக்கத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.  

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்கள் கரூர் கம்பெனி மூலமாக சில நிபந்தனைகளுக்கு ஆளாக்கப்படுவதாக ஏற்கனவே பரவலாக புகார் இருக்கிறது. இதுகுறித்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களே பகிரங்கமாக புகார் கூறியிருக்கிறார்கள். மேலும் தனியார் மதுபான கம்பெனிகள்… டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்யும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சப்ளை செய்தால், அதற்கேற்ற வகையில் பார்ட்டி ஃபண்ட்  செலுத்த வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. இது அதிமுக ஆட்சியிலும் கூட நடைமுறையில் இருந்தது.

அப்படிப்பட்ட பார்ட்டி ஃபண்ட் பற்றிய தகவல்கள், குறிப்புகள் கிடைக்குமா என்பதுதான் அமலாக்கத்துறையின் முக்கிய தேடலாக இருந்திருக்கிறது. அப்படி கிடைத்தால், அதை வைத்து அமைச்சர் செந்தில்பாலாஜியையும் திமுக கட்சியையும் சிக்க வைக்கலாம் என்பதுதான் ஈ.டி. பிளான்.

இந்நிலையில், ரெய்டுக்கு போன அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தனியார் மதுபான ஆலை ஊழியர்கள் மூலம் சுவாரஸ்யமான வேறு சில தகவல்களும் கிடைத்திருக்கின்றன.

அதாவது டாஸ்மாக் அமைச்சராக செந்தில்பாலாஜி வந்தபிறகு, மதுபான கொள்முதல் தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனால் மதுபான ஆலைகள் வைத்திருக்கும் திமுகவினரே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செந்தில்பாலாஜி மீது வருத்தத்திலும், கோபத்திலும் இருக்கும் தகவலும் அமலாக்கத்துறைக்குக் கிடைத்திருக்கிறது. ED third day raid TASMAC

அதாவது தமிழ்நாட்டில் மொத்தம் 11 மதுபான நிறுவனங்கள் டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்கின்றன. செந்தில்பாலாஜி  அமைச்சராக வந்த பிறகு கொள்முதல் நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார்.

அதாவது எந்த சரக்கு அதிகமாக விற்பனை ஆகிறதோ, அந்த சரக்கு கொள்முதலை அதிகப்படுத்தினார்.  சில கம்பெனிகளின் சரக்குகள் மிக்சிங் சரியானபடி இல்லை உள்ளிட்ட காரணங்களால் விற்பனையே ஆகாமல் தேங்கின. இந்த வகையில் சில மது பான ஆலைகளின் சரக்கு ஆர்டர்கள் வெகுவாக குறைக்கப்பட்டன.  சில கம்பெனிகளில் இருந்து கொள்முதல் செய்வதையே நிறுத்திவிட்டார் செந்தில்பாலாஜி.

இதையடுத்து ’எங்கள் கம்பெனியின் மதுபான ஆலையில் இருந்து சரக்கு கொள்முதலை ரொம்ப குறைச்சிட்டாங்க…’ என்று சில திமுக பிரமுகர்கள் முதல்வர் ஸ்டாலினிடமே நேரடியாக முறையிட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்டாலின், ‘இதைப் பத்தி செந்தில்பாலாஜிகிட்டயே பேசுங்க’ என்று சொல்லிவிட்டார்.  அவர்தானே குறைத்தது, அவரிடம் எப்படி பேசுவது என்ற ஈகோ பிரச்சினையால் செந்தில்பாலாஜியிடம் போகாமலேயே புலம்பியிருக்கிறார்கள் திமுக மதுபான ஆலைப் புள்ளிகள். இந்த பிரச்சினையாலேயே ஜெகத்ரட்சகன் தனது பீர் ஆலையை மூடிவிட்டார். அதுமட்டுமல்ல..  எஸ்.அண்ட். ஜே கம்பெனி மட்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு விற்பனைக்கு உரிய கமிஷன் கொடுத்து தனது சப்ளையை மெயின்டெய்ன் செய்து வருகிறது.  

‘இந்தத் தகவல்கள் எல்லாம் தனியார் மதுபான ஆலை அலுவலகத்தில் இருக்கும் உயரதிகாரிகள் மூலமாகவே ரெய்டுக்கு போன ஈ.டி. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆவணங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு…. திமுகவில் இருக்கும் சீனியர் புள்ளிகளுக்கு செந்தில்பாலாஜி மீது இருக்கும் அதிருப்தி பற்றிய தகவல்களே கிடைத்திருக்கிறது. இருப்பினும் தளராமல் இன்று வரை தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர்.

இது ஒருபக்கம் என்றால்  எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை செய்த போது 300 கோடி ரூபாய் வரி சம்பந்தமாக ஜெகத்ரட்சனுக்கும்,  வருமான வரித் துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாகவும் ஜெகத்ரட்சகன் மதுபான ஆலையில் சோதனையிட்டபோது விசாரித்துள்ளனர் அமலாக்கத்துறையினர்.

இந்த ரெய்டுக்கு இடையே நேற்று (மார்ச் 7) தலைமைச் செயலகம் சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி முதல்வரின் செயலாளர் உமாநாத்தை சந்தித்து சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு கரூர் சென்றார்.

நேற்று கரூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செந்தில்பாலாஜி, மாலை கரூரில் தொழில் முனைவோர் சந்திப்பில் கலந்துகொண்டார். அதன்பின் கோவை சென்ற செந்தில்பாலாஜி இன்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜியிடம்  மூன்றாவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாக கேட்கப்பட்டது.  அப்போது அவர், ‘சோதனைகள் முழுதாய் முடியட்டும், அதன் பின் பதில் சொல்கிறேன்’ என்று கூலாக பதிலளித்துள்ளார். 

அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘கோவை மாவட்டத்தில் 10, ஈரோடு மாவட்டத்தில் 8,  கரூர் மாவட்டத்தில் 4, திருப்பூர் மாவட்டத்தில் 8 என மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளில் 22  தொகுதிகளை நானே பொறுப்பேற்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கைப்பற்றித் தருவதாக செந்தில்பாலாஜி  முதல்வர் ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்து அதற்கான செயல் திட்டங்களில் இறங்கிவிட்டார். இது தொடர்பான போக்குவரத்துகளும் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு செய்யப்பட்டு வருகின்றன’ என்ற தகவல் கிடைத்ததால்தான் உடனடி அட்டாக்காக இந்த ரெய்டை நடத்தி வருகிறார்கள் அமலாக்கத்துறையினர்.

கொங்கு மண்டலத்தின் பாதியை செந்தில்பாலாஜி வெற்றி பெற வைக்க நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதால்தான், அவரை முடக்க இந்த ரெய்டு தொடங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share