டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் கடந்த 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது.
மதுபான கொள்கையை திருத்தி அமைத்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினரும், சந்திரசேகர் ராவ் மகளுமான கவிதா, ஆந்திராவின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எம்பியான மகுண்டா சீனிவாசலு ரெட்டி மற்றும் அரவிந்தோ பார்மாவின் சரத் ரெட்டி ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக, கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கவிதாவிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்தநிலையில் பாரத ராஷ்டிரிய கட்சியின் மேலவை உறுப்பினர் கவிதாவை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை: செங்கோட்டையன் மகனுக்கு அண்ணாமலை வலை – எடப்பாடி கொடுத்த பதிலடி!