டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் மகளும் தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவை மார்ச் 16-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மதுபான கொள்கையின்படி, தனியாருக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதனால் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்பப்பெறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில்,டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சொளத் குரூப் தொழிலதிபர்கள் குழு மதுபான உரிமம் வாங்குவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் என்பவர் மூலமாக ரூ.100கோடியை வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
செளத் குரூப்பில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, புச்ச்சிபாபு, சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.பி.ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர்.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி கவிதாவை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் கவிதா டெல்லி துக்ளக் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து, APJ அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சென்றார்.
அப்போது வழிநெடுகிலும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அவரிடம் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மார்ச் 16ஆம் தேதி விசாரணைக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர்.
கவிதா அமலாக்கத்துறையில் ஆஜரானது தேசிய அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
கார் ஏறி சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி!
டியர் ஸ்டூடண்ட்ஸ்…ஆல்தி பெஸ்ட் : கூலாக வாழ்த்து சொன்ன முதல்வர்!