மணல் அதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் கொடுப்பதற்காக தான் மணல் குவாரி அதிபர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்று நமது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி மணல் தொழிலதிபர்கள் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன், ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா மற்றும் சோதனை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
இந்த நிலையில் மணல் குவாரி அதிபர் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக இன்று (நவம்பர் 25) பகல் தகவல் வெளியானது.
இது குறித்து மின்னம்பலத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இன்று மாலை மணல் வட்டாரத்தில் விசாரித்த போது “அமலாக்கத்துறை இன்று ரெய்டுக்கு வரவில்லை. சம்மன் கொடுக்க தான் வந்தார்கள். ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் ஒரு காரில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 20 முதல் 30 நிமிடங்கள் அங்கே இருந்தார்கள். பின்னர் சம்மனை கொடுத்து விட்டு கிளம்பிவிட்டார்கள். ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்த வார ஆரம்பத்தில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா