டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் துரைமுருகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்… மொத்தமும் கொட்டிய முத்தையா?

Published On:

| By Monisha

வைஃபை ஆன் செய்ததும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முத்தையாவை இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை செய்யும் செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது, “தமிழ்நாட்டில் அரசு நடத்தும் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மிகப்பெரிய அளவில் மணல் அள்ளப்பட்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் , இதில் மிகப்பெரிய நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை செப்டம்பர் மாதம் சுமார் 20க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளில் ரெய்டு நடத்தியது.

அதன் தொடர் நடவடிக்கையாக நேற்று (நவம்பர் 20) நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் ஆஜரானார். காலை அமலாக்கத்துறை அலுவலகம் சென்ற முத்தையா இரவு 9.50 வரை சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இரண்டாவது நாளாக இன்று காலை மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றிருக்கிறார் முத்தையா.

 

அரசியல்வாதியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றால் அது அரசியல் ரீதியாக பரபரப்பாகும். ஆனால், தமிழ்நாட்டின் நீர்வளத்துறை உயரதிகாரியாக இருக்கும் முத்தையாவை இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரிப்பது, அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் நேற்று பகல் எழிலகத்தில் இருக்கும் நீர்வளத்துறை அலுவலக அதிகாரிகளும், தலைமைச் செயலகத்தில் இருக்கும் நீர்வளத்துறை உயரதிகாரிகளும் அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் தங்கள் அலுவலகத்துக்குள் வரலாம் என்ற செய்தி கிடைத்து அதிர்ச்சியாக காத்திருந்தனர். நேற்று நீர்வளத்துறையின் உயரதிகாரிகள் பலர் மதிய உணவே சாப்பிடவில்லை. சென்னை காமராஜர் சாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருப்பதை உளவுத்துறையினர் மோப்பம் பிடித்து அரசுத் தரப்புக்கு சொல்லிக் கொண்டே இருந்தனர். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தண்டையார் பேட்டையில் இருக்கும் ஜூவல்லரிக்கு பீச் சாலை வழியாக சென்றிருக்கிறார்கள். இந்த பதற்றம் எல்லாம் அடங்கி நீர்வளத்துறை அதிகாரிகள் பிற்பகல் 3.45 மணிக்கு மேல்தான் சாப்பிட்டிருக்கிறார்கள்.

அதேநேரம் முத்தையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் என்னென்ன கேட்கப்பட்டது என்று நேற்று காலையில் இருந்தே அரசுத் தரப்பினரும், அமைச்சர் துரைமுருகன் தரப்பினரும் பதற்றமாக இருந்தனர். அதிகாரிகள் தரப்பில், ‘பொறியாளர் முத்தையா அப்ரூவராக மாறிவிட்டார். அதனால் அமைச்சர் துரைமுருகனுக்கு கடும் சிக்கல் காத்திருக்கிறது’ என்ற பேச்சு தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் முத்தையாவிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் முக்கியத்துவம் என்ன என்று விசாரித்தபோது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

முத்தையாவின் ஆரம்ப காலப் பதவிகளை பற்றியெல்லாம் கேட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழ்நாட்டில் அரசு நடத்தும் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு என்ன, ஆனால் தோண்டப்பட்ட மணலின் அளவு என்ன என்பது பற்றிய புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு கேட்டனர்.
ஏற்கனவே நீங்கள் போலி ரசீதுககள் மூலம் மணல் விற்பனை பற்றி தெரிந்து வைத்துள்ளீர்கள், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளீர்கள் அதுபற்றி சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர்.

‘இங்கே விசாரணையில் நீங்கள் முழுமையாக ஒத்துழைத்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. உங்கள் குடும்பத்தினர் பெயரில் வாங்கிய சொத்துகள் விவரமெல்லாம் இதோ இருக்கிறது. பிறகு அதுபற்றியும் விசாரிப்போம். இப்படியே நீங்கள் சிறை செல்ல வேண்டியதுதான். உங்களின் அரசு அதிகாரி பணியும் பறிபோகும்’ என்றெல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் போகப் போக கடுமை காட்டியிருக்கிறார்கள்.

’ஏற்கனவே நாங்கள் உங்களுக்கு சம்மன் கொடுத்தபோது ஆஜராகாமல் லீவு போட்டுச் சென்றது ஏன்? அமைச்சர் சொல்லித்தான் லீவு போட்டுச் சென்றீர்களா?’ என்றும் கேட்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் முத்தையாவிடம் இருந்து தங்களுக்குத் தேவையான, தாங்கள் எதிர்பார்த்த எல்லா விவரங்களும் கிடைத்து விட்டது என்பதே அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத் தகவலாக கிடைக்கிறது.

நேற்று இரவு 9.50 மணிக்கு அமலாக்கத்துறையில் இருந்து முத்தையா புறப்படும்போது, ‘இங்கே விசாரணை நடந்தவற்றை அமைச்சர் தரப்பிடம் சொல்ல முயலக் கூடாது’ என்று எச்சரித்துதான் அனுப்பியிருக்கிறார்கள்.

நேற்று வேலூரில் கூட்டுறவு வார விழா, இலவச பட்டா வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டாலும், முத்தையாவிடம் விசாரணை நடந்த விவரங்களைப் பற்றி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். முதல்வர் தரப்பில் இருந்தும் துரைமுருகனுக்கு சில முக்கியமான தகவல்கள் தெரிவிக்கப்பட நேற்று மாலையே வேலூரில் இருந்து சென்னை திரும்பினார் அமைச்சர் துரைமுருகன். முத்தையா நேற்று இரவு வெளியே வந்ததுமே அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் முத்தையாவைத் தொடர்புகொண்டனர். விசாரணையில் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இன்று இரண்டாவது நாளாக முத்தையாவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை வட்டாரத்தில் இதுகுறித்து கேட்டபோது, ‘தமிழ்நாடு முழுதும் அரசு நடத்தும் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு என்ன என்பதை நீர்வளத்துறையிடம் இருந்து பெற்றோம். ஆனால் உள்ளபடியே ஆறுகளில் அதே அளவுதான் மணல் அள்ளப்பட்டிருக்கிறதா என்பதை இஸ்ரோ, கான்பூர் ஐஐடி நிபுணர்களிடம் கேட்டிருந்தோம். அவர்களின் முதல் கட்ட தகவல்படி தமிழ்நாடு முழுதும் சுமார் 6 லட்சம் லோடு மணல் அனுமதி இல்லாமல் தோண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்த ஆவணங்களை வைத்து முத்தையாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. மற்ற அதிகாரிகளோடு ஒப்பிடும்போது முத்தையா அமலாக்கத்துறைக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்ததும் கிடைத்தது, எதிர்பாராததும் கிடைத்தது’ என்கிறார்கள்.

வரும் நவம்பர் 27 ஆம் தேதி அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளன்று சென்னையில் திமுக சார்பில் வி.பி.சிங் சிலை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கான அழைப்பிதழை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு டெல்லி சென்று அவரிடம் அளித்தார்.

இந்த விழாவுக்கு முன்னதாக அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைப்பதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என்றும், இதற்காக துரைமுருகனுக்கு சம்மன் கூட அனுப்பிவிட்டார்கள் என்றும் கோட்டை வட்டாரத்தில் பலமாக பேச்சு உலவுகிறது. துரைமுருகன் விசாரணைக்கு ஆஜரானால் அதன்பின் அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகள் அரங்கேறும் என்பதே இப்போதைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’ஆடு மேய்ச்சா நீ ஆண்டவரா?: குய்கோ டிரெய்லர் வெளியானது!

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்?: போலீஸ் விசாரணை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.