செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 25) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஓராண்டிற்கு மேலாகச் சிறையில் இருக்கிறார்.
அவரது ஜாமீன் மனுக்களை ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவருக்கான நீதிமன்ற காவலை 49வது முறையாக நீட்டித்துள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ’கைப்பற்றியதாகச் சொல்லப்படும் பென் டிரைவிற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை’ என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமலாக்கத்துறை தெரிவித்தது.
அதனையடுத்து, “செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே?கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் கூடுதல் ஆவணம் எப்படி வந்தது? டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம்பெற்று இருக்கிறது? என்று நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.
எனினும், அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் பதில் தெரிவிக்காத நிலையில், அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை (இன்று) பதிலுடன் வருமாறு கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
எனினும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர பட்டியலிடப்படவில்லை.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பினர் நீதிபதிகளிடம் சென்று முறையீடு செய்ததை அடுத்து, நீதிபதிகள் வழக்கை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு, ஆகஸ்ட் 5ம் தேதிக்கு 10 நாட்களுக்கு மேல் இருப்பதால் வழக்கை இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் லோக் அதாலத் நடப்பதால் மதிய நேரம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும், ஆகஸ்ட் 5ம் தேதிக்கு மிக பெரிய காலஇடைவெளி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முடங்கிய விண்டோஸ்… அன்றே கணித்தாரா கபிலன் வைரமுத்து?
திமுகவிற்கு எதிராக பேச்சு : அறிக்கை கேட்கும் காங்கிரஸ் தலைமை!