அசோக் குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாரின் மனைவி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 9) சம்மன் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து அமலாக்கத் துறையின் கஸ்டடியில் அமைச்சர் செந்தில்பாலாஜி இருந்து வருகிறார்.
இதற்கிடையே அவரது சகோதரர் அசோக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கதுறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவரும் செந்தில் பாலாஜியை போன்றே இதய பிரச்சினை இருப்பதாக கூறி ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில் கரூரில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அசோக்குமாரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ராம்நகர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் பல கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர் மூன்றாவது இடமாக அசோக் குமாரின் ஆடிட்டர் சதீஸ்குமாரின் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அசோக் குமார் வீட்டின் முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸை ஒட்டிச் சென்றுள்ளனர்.
அதில், புதிதாக கட்டி வரும் பங்களா தொடர்பான முழுமையான ஆவணங்களுடன் அசோக் குமார் மனைவி நிர்மலா நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தைரியம் இருந்தால்… ராகுல்காந்தியிடம் கேள்விகளை அடுக்கிய ஸ்மிருதி இரானி
கழுதைப் பாலுக்கு வந்த டிமாண்ட்… கல்லா கட்டும் வியாபாரிகள்: அப்படி என்ன இருக்கு அதில்?