வைஃபை ஆன் செய்ததும் சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிவைத்து மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது அமலாக்கத்துறை. ED search Minister Senthilbalaji
இன்று (மார்ச் 6) காலையிலேயே கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமலாக்கத்துறையின் இருபது அதிகாரிகள் சென்னை, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபடத் தொடங்கினர். இவர்களுக்கு பாதுகாப்பாக சிஆர்பிஎஃப் போலீஸார் உடன் வந்திருக்கிறார்கள்.
கரூரில் 80 அடி ரோட்டில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர், கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் கார்த்தி வீடு அலுவலகம், செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. ED search Minister Senthilbalaji
2023, 2024ல் செந்தில்பாலாஜி தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஐ.டி.யும், அமலாக்கத்துறையும் சோதனை நடத்திய இடங்களில் மீண்டும் இப்போது சோதனை நடைபெற்றிருக்கிறது. இதுமட்டுமல்ல, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் தனியார் ஆலைகள் தொடர்பான இடங்களிலும் சோதனைகள் நடந்துள்ளன.
இதே நேரம் இன்று பகல் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் நான்காவது, ஐந்தாவது மாடியில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வது, விற்பனை செய்வது மற்றும் விற்பனை விவரங்கள், கொள்முதல் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் சில தனியார் மது ஆலைகளின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திமுக ஆட்சி அமைத்த 2021 முதல் மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. 2023 இல் அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் துறை இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அவரிடம் இருந்த துறைகளான டாஸ்மாக்கை முத்துசாமியிடமும், மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவிடமும் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
2024 செப்டம்பரில் செந்தில்பாலாஜி ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியானதும், மீண்டும் அவருக்கு டாஸ்மாக், மின்சாரம் என இரு முக்கியத் துறைகளும் கொடுக்கப்பட்டன. செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது கூட அவர் போட்டுவைத்த ரூட்டில்தான் மின்சாரம், டாஸ்மாக் துறைகள் செயல்பட்டன என கோட்டை வட்டாரத்தில் அப்போதே கூறினார்கள். அவர் சிறையில் இருந்து வந்ததும் மீண்டும் இந்த இரு பெரும் துறைகளையும் அவரிடமே ஒப்படைத்தார் முதல்வர்.

ஏற்கனவே மணல் குவாரிகள் விவகாரத்தில் பல லட்சம் லோடு மணல் விற்பனை கணக்கில் வராமலேயே நடந்திருக்கிறது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. அதனால் மத்திய அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறின. அப்போதே… ‘இதே அடிப்படையில் மது விவகாரத்துக்குள்ளும் அமலாக்கத் துறை நுழையும்’ என திமுகவுக்குள்ளேயே பேச்சு எழுந்தது. ED search Minister Senthilbalaji
அதன்படியே டாஸ்மாக்கில் கொள்முதல் செய்யப்படும் மதுவில் 3 இல் 1 பங்கு கணக்கில் வரவில்லை என்றும், இதனால் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி இழப்பு ஏற்படுவதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையிலேயே இந்த சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
அதனால், மீண்டும் செந்தில் பாலாஜியை குறிவைத்தே அமலாக்கத்துறையின் நகர்வுகள் இருக்கின்றன. இன்று சோதனைகள் தொடங்கியபோது சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள தனது இல்லத்தில் தான் இருந்தார் செந்தில்பாலாஜி. அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார்.
இந்த ரெய்டுக்குப் பின்னால் அரசியலும் பலமாக இருக்கிறது.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையில் பாஜக கட்சி அலுவலக திறப்பு விழாவில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது, அவரது பேச்சிலேயே அமலாக்கத் துறை ஆபரேஷனுக்கான அறிகுறிகள் தென்பட்டன. திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
’தமிழ்நாட்டில், சட்டவிரோத மதுபானம் குறித்து புகார்கள் வரும்போது, அதை தயாரிப்பதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள்’ என்று சட்ட விரோத மது வணிகம் தமிழ்நாட்டில் நடப்பதாக தனது பேச்சில் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ED search Minister Senthilbalaji
அதுமட்டுமல்ல… திமுகவில் ஒருவர் வேலைக்காக பணம் பெற்ற ஊழலில் ஈடுபட்டுள்ளார், மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத செம்மண் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார், மூன்றாவது ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கில் சிக்கியுள்ளார், நான்காவது ஒருவர் நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர், ஐந்தாவது தலைவர் 6,000 கோடி CRIDP திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் திமுக அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடாமல் ஹிட் லிஸ்ட் போலவே மேடையில் வெளியிட்டார் அமித் ஷா.
இதுமட்டுமல்ல… கோவை ஈஷாவில் சிவராத்திரி நிகழ்வின் போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணியை சந்தித்தார் அமித் ஷா. அவர் எப்போதுமே வேலுமணியை, ‘மணி ஜீ… மணி ஜீ…’ என்றுதான் அழைப்பார். அந்த இரவும் கூட அப்படித்தான், ‘மணி ஜீ… 2026 இல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் வரக் கூடாது. அதற்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்று வேலுமணியிடம் பேசியிருக்கிறார்.

இந்த பின்னணியில்தான் இப்போது செந்தில்பாலாஜியிடம் மீண்டும் தொடங்கியிருக்கிறது அமலாக்கத்துறையின் ஆட்டம். கோவையில் அமித் ஷாவின் ஹிட் லிஸ்ட்படி அடுத்து ஒவ்வொரு திமுக புள்ளியாக ஆபரேஷன் தொடரும் என்கிறார்கள்.,
கோட்டை வட்டாரத்தில் இதுகுறித்து பேசியபோது, ‘முதலமைச்சர் தொடர்ந்து அமைச்சர்களை எச்சரித்தே வந்திருக்கிறார். ஒன்றிய அரசு திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது கிடைக்காதா என்று தொடர்ந்து துருவி வருகிறது. இதற்காக ஆளுநர் மாளிகையிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஆளுநர் மாளிகையில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட தகவலில், ‘ஃபைல்களில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ நடக்கிறது’ என்று சொல்லப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில்தான் இப்போது டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை ஆபரேஷன் தொடங்கியிருக்கிறது’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்..