ED raids at places belonging to Martin and Adhav Arjuna for 2nd day!

மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக ED சோதனை!

அரசியல்

சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக இன்று (நவம்பர் 15) அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று, வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் அவர் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து, மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த 2019, 2021-ம் ஆண்டுகளில் ரூ.277.59 கோடி, 2022-ம் ஆண்டு ரூ.173.48 கோடி மதிப்பிலான அசையும், அசையாத சொத்துகள் முடக்கப்பட்டன.

கடந்த 2023 மே மாதம் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தி, ரூ.456.86 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.

தொடர்ந்து மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டுஅக்டோபரிலும் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் ஓராண்டுக்கு பின்னர் கோவை துடியலூரில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை 6.30 மணி முதல் மீண்டும் சோதனை நடத்தினர்.

அதே போன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அவரது மருமகனும், விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் வீடு, திருவல்லிக்கேணியில் மார்ட்டினின் மகன் டைசனுக்கு சொந்தமான நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல, சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று இரண்டாவது நாளாக மார்ட்டின் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து வருகின்றனர். மேலும் அந்த இடங்களில் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு எகிறும் காற்று மாசு… இன்று முதல் GRAP 3 அமல்!

Asian Champions Trophy : தாய்லாந்தை ஊதித் தள்ளிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *