இன்று அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் அமலாக்கத்துறையின் சோதனையை அடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம்.
அப்போது சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. அதற்கு 2 ஆண்டுகளுக்கு பின் 2016ஆம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது.
இதற்காக வைத்திலிங்கத்திற்கு ரூ.27.9 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
இதனை உறுதி செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 மணி நேரமாக தொடரும் சோதனை!
இந்த நிலையில் தஞ்சை ஒரத்தநாட்டை அடுத்த தெலுங்கன் குடிக்காட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று (அக்டோபர் 23) அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதி வளாகத்தில் இருக்கும் வைத்திலிங்கம் அறையிலும்,
தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் மகன் பிரபு வீட்டிலும், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான முத்தம்மாள் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நீங்க கிளம்புங்க!
சோதனை நடைபெற்று வரும் அவரது வீட்டின் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் காலை முதல் குவிந்து வருகின்றனர்.
இதனையறிந்து வீட்டிற்கு வெளியே வந்த வைத்திலிங்கம், ”ஒன்னும் பிரச்சனையில்ல. நீங்க கிளம்புங்க… அவங்க கேக்குற கேள்விக்கு பதில் கொடுத்துட்டு இருக்கேன். அவ்வளவு தான்” என்று கூறிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
தற்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக கூட்டணியில் விவாதம் இருக்கலாம், விரிசல் இல்லை: எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில்!
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? கணவர் சொல்வது என்ன?