வைஃபை ஆன் செய்ததும் கடந்த வாரம் டாஸ்மாக் தொடர்பாக நடத்திய ரெய்டு குறித்த அமலாக்கத் துறையின் விரிவான அறிக்கை இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கடந்த மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான நபர்கள், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது பானம் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை எழும்பூரில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். ED Raid TASMAC Sendhilbalaji summon
சோதனைகள் முடிந்து 5 நாட்களாக அமைதி காத்த அமலாக்கத்துறை, இன்று (மார்ச் 13) விரிவான இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதில், ‘ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் TASMAC இல் உள்ள பல்வேறு சிக்கல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பல FIRகளின் அடிப்படையில் ED விசாரணையைத் தொடங்கியது’ என ரெய்டுக்கு அடிப்படையாக தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்களையே சுட்டிக் காட்டியிருக்கிறது அமலாக்கத்துறை.
மேலும், ‘மதுபானங்களின் MRP விலையை விட அதிகமாக வசூலித்தல், விநியோக ஆர்டர்களுக்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு டிஸ்டிலரி நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தல், டாஸ்மாக் ஊழியர்களை பணியமர்த்துவதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதில் ஈடுபட்டுள்ளனர்’ என சுட்டிக் காட்டியிருக்கிறது.
மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது பற்றியும் விளக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

’டாஸ்மாக் அலுவலகங்களில் நடந்த சோதனையின் போது, இடமாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில டிஸ்டில்லரி நிறுவனங்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்ட ஆர்டர்கள், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் 30 வரை கூடுதல் கட்டணம் வசூலித்தது போன்ற குற்றவியல் தரவுகள் மீட்கப்பட்டுள்ளன. ED Raid TASMAC Sendhilbalaji summon
டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தவிர, TASMAC ஆல் பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. GST எண் இல்லாத PAN எண் இல்லாத விண்ணப்பங்களுக்குக் கூட பார் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கும் உயர் TASMAC அதிகாரிகளுக்கும் இடையேயான நேரடி தொடர்பு மூலம் அந்நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட கண்டுபிடிப்புகள் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் கீழ் பல்வேறு குற்றங்கள் நிகழ்வதையும், PMLA, 2002 இன் விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி குற்ற வருமானத்தை (POC) உருவாக்குவதையும் நிறுவுகின்றன’ என இந்த அறிக்கையில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் இறுதி பகுதியில்தான் அமலாக்கத்துறை சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது.,
’SNJ, Kals, Accord, SAIFL, மற்றும் Shiva Distillery போன்ற டிஸ்டில்லரி நிறுவனங்களுடன் சேர்ந்து பெரிய அளவிலான நிதி மோசடி நடந்திருப்பது சோதனையில் தெரியவந்தது. தேவி பாட்டில்கள், கிரிஸ்டல் பாட்டில்கள் மற்றும் GLR ஹோல்டிங் போன்ற பாட்டில் நிறுவனங்களும் டிஸ்டில்லரி நிறுவனங்களும் சேர்ந்து ரூ.1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணத்தை உருவாக்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், டாஸ்மாக், டிஸ்டில்லரி மற்றும் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஊழியர்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்பான சட்டவிரோத விவகாரங்களில் முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளது அமலாக்கத் துறை.

இரண்டு பக்க அறிக்கையில் எங்கும் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரை அமலாக்கத்துறை குறிப்பிடவில்லை. அதிகாரிகளுக்கும் மதுபான ஆலை நிறுவனங்களுக்கும் இடையிலான ஊழல், மற்றும் டெண்டர் விடுவதில் முறைகேடு என அடுக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. ED Raid TASMAC Sendhilbalaji summon
இந்த அறிக்கைக்கு அடுத்தகட்டமாக டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்கிறார்கள். எப்படி டெல்லி மதுபான விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி அவரை கைது செய்தார்களோ, அதேபோல வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் செந்தில்பாலாஜியை இந்த மதுபான விவகாரத்தில் பி.எம்.எல்.ஏ. சட்டப்படி கைது செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.