வைஃபை ஆன் செய்ததும் உச்ச நீதிமன்றத்தில் நடந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கு பற்றிய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”2023 டிசம்பர் 1ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி. சிறையில் அடைக்கப்பட்ட திவாரி மீதான வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வந்தது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு போனது அமலாக்கத்துறை.
அந்த வழக்கு இன்று (ஜனவரி 25) விசாரணைக்கு வந்த போது வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்கு விசாரிக்க தடை விதித்த உச்ச நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பழிவாங்குகிற வகையில் செயல்படுவதாக அமலாக்க துறையும், அமலாக்கத்துறை தான் பழிவாங்கும் விதமாக செயல்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசும் மாறி மாறி வாதிட்டார்கள்.
இந்த நிலையில் அமலாக்கத்துறைக்கு இடைக்கால நிவாரணமாக இரண்டு வாரங்களுக்கு இந்த வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதே நேரம் தமிழ்நாட்டில் மேலும் சில முக்கிய வழக்கு விவகாரங்களை அமலாக்கத்துறை கையில் எடுத்து திமுக முக்கிய புள்ளிகளுக்கும், திமுக அரசுக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஓசன் குழு நிறுவனங்களின் நிறுவனர் பீட்டர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இது தொடர்பாக 22 ஆம் தேதி அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தியில்,
சென்னை மாநகர போலீஸார் வணிக நிறுவனத்தின் பார்ட்னர்கள் இடையே செட்டில்மென்ட் செய்து வைத்ததாக வந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இது தமிழ்நாடு போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருக்கும் ஓஷன் லைப் ஸ்பேஸ் (ocean life spaces) எனும் பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு தொடர்புள்ள இடங்களில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக எஸ்.கே.பீட்டர் மற்றும் பாலசுப்ரமணியன் ஸ்ரீராம் ஆகியோர் இருந்து வந்தனர். இருவருக்கும் இடையிலான பார்ட்னர் ஷிப்பில் சில மாதங்களாகவே பிரச்சினை ஏற்பட்டது. அதனால் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். பிரியும்போது நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை பிரித்துத் தருமாறு பாலசுப்பிரமணியன் ஸ்ரீராம் கேட்டுள்ளார். ஆனால் பீட்டர் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் இருவருக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் பீட்டர் குறித்து போலீசில் ஸ்ரீராம் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பீட்டர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டு ‘பஞ்சாயத்து’ பேசி பீட்டரிடம் இருந்து பெரும் தொகையை ஸ்ரீராமுக்கு பெற்றுக் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்த விவகாரத்தில் தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்த போதும் ஸ்ரீராம் சென்னை சிட்டி போலீஸை அணுகியுள்ளார். அதன்படி அவருக்கு சேரவேண்டிய 13 கோடி ரூபாய்க்கு பதில் ஒன் டைம் செட்டில்மென்ட் ஆக 50 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு நடந்து வருகிறது என்று அமலாக்கத்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் பீட்டரை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி அந்த பணம் எவ்வாறு, யாருக்கு அனுப்பபட்டது என்பதை விசாரிக்க களமிறங்கியிருக்கிறது.
பார்ட்னர்களில் ஒருவரான ஸ்ரீராம் அரசியல் செல்வாக்கு மூலம் போலீஸுக்கு அழுத்தம் கொடுத்து இந்த பஞ்சாயத்தை முடித்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஸ்ரீராமுக்காக அழுத்தம் கொடுத்தது யார் என்பதைத்தான் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாகவும் இந்த விவகாரத்தை சங்கிலித் தொடர்புகள் மூலமாக அமைச்சர் உதயநிதி வரை கொண்டுபோக வாய்ப்பிருப்பதாகவும் அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்களிலேயே பேச்சு இருக்கிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக புள்ளிகளையும், திமுகவுக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்க அமலாக்கத்துறை தீவிரமாகிவிட்டது என்கிறார்கள்.
ஏற்கனவே மணல் குவாரிகள் விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மன்களுக்கு எதிராக தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், அந்த சம்மன்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்த நிலையில் இப்போது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அமலாக்கத்துறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தைப்பூசமா? தேர்தல் பாசமா? : அப்டேட் குமாரு
‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ : இளையராஜா மகள் பவதாரிணி காலமானார்!