ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை இன்று (ஜனவரி 20) விசாரணை நடத்தி வருகிறது.
சட்டவிரோத சுரங்க அனுமதி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியது.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான காரணங்களை கூறி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் சம்மனை புறக்கணித்து வந்தார். இந்த நிலையில் இறுதியாக ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜனவரி 13 ஆம் தேதி சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜனவரி 16 முதல் 20 ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இதனையடுத்து தனது வீட்டிலேயே விசாரணை நடத்த ஹேமந்த் சோரன் ஒப்புக் கொண்டார். இதனிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானால் ஜார்கண்ட் முதல்வர் கைது செய்யப்படலாம் என்றும், அவர் முதல்வர் பதவியை தனது மனைவி கல்பனா சோரனிடம் ஒப்படைக்க உள்ளார் என்றும் பாஜக தெரிவித்திருந்தது. இதற்கு ஹேமந்த சோரன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தி வருகிறது. இதனால் ஹேமந்த் சோரன் வீடு மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் மண்டல அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹேமந்த் சோரன் வீட்டிற்கு முன்பும், அவரது வீட்டிற்கு செல்லும் சாலைகளிலும் பாரிகார்டுகள் வைத்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா