ED has summoned Vellore MP Kathir Anand
திமுக பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அமலாக்கத்துறை, அமைச்சர் துரைமுருகனை குறிவைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மணல் குவாரிகளில் நடந்திருப்பதாக சொல்லப்படும் முறைகேடுகள் தொடர்பாக நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாவிடம் இரண்டு நாள் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதையடுத்து துறையின் மேலும் சில உயரதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரிக்கும் என்றும், அடுத்து அமைச்சர் துரைமுருகனையே விசாரணைக்கு அழைக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் இ.டி. வட்டாரங்களில் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிஜிட்டல் திண்ணையில் அமைச்சர் துரைமுருகனுக்கு சம்மன் மொத்தமும் கொட்டிய முத்தையா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள், வரும் நவம்பர் 28 ஆம் தேதி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கதிர் ஆனந்த் எம்பிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார்.
தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட காட்பாடியில் சுமார் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் பணம் கட்டுக் கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கதிர் ஆனந்த, பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் வேலூர் தொகுதியில் தேர்தலையே நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம். 2019 ஆகஸ்டு மாதம்தான் வேலூர் தொகுதிக்கு மக்களவைத் தேர்தல் நடந்தது. இது அப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலே நெருங்கிவிட்ட நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக மெதுவாக நடந்த இந்த வழக்கு நவம்பர் 23 ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். வழக்கு டிசம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தேர்தல் நேர பணம் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் எம்பிக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.
ஆனால் விசாரணை என்பது இந்த வழக்குக்காக என்று சொல்லப்பட்டாலும்… மணல் விவகாரம் தொடர்பாக கதிர் ஆனந்திடம் விசாரணை நடத்தப்படவே அதிக வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள். ED has summoned Vellore MP Kathir Anand
அமைச்சர் துரைமுருகனுக்கு ஏற்கனவே மணல் குவாரி தொடர்பாக சில கேள்விகளை அனுப்பி அதற்கு எழுத்துபூர்வமான பதில்களை அமலாக்கத்துறை பெற்றிருப்பதாகவும்… அதையெடுத்தே கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
மணல் தொழிலில் ஈடுபட்டுள்ள கரிகாலன் போன்றோரோடு கதிர் ஆனந்துக்கு இருக்கும் தொடர்புகள், கதிர் ஆனந்தின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாகவும் விசாரணையில் கேட்கப்படலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரத்தில் தகவல்கள் உலவுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
டிஜிட்டல் திண்ணை: திமுக நடத்தும் சாதி வாரி கணக்கெடுப்பு!
பேரைச் சொல்லவா… அது நியாயமாகுமா? அப்டேட் குமாரு