”அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்றால் சொத்துக்களை மட்டும் தான் முடக்க முடியும். ஆதாரங்களை சேகரிப்பதும் புலன் விசாரணை தான்” என்று துஷார் மேத்தா இன்று (ஜூலை 12) வாதாடி வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தற்போது விசாரித்து வருகிறார்.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டனர்.
இதனையடுத்து கபில் சிபல் நேற்று முன்வைத்த, “அமலாக்கத்துறை விசாரணை செய்ய முடியுமே தவிர புலனாய்வு செய்ய முடியாது” என்ற வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைத்து வருகிறார்.
புலன் விசாரணை.. அமலாக்கத்துறையின் கடமை
அவர், ”ஏற்கெனவே ஐநா சார்பில் சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக 40 கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக உலக நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதா என்பதை ஆராய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2000 ஆண்டுகளில் சட்ட விரோத பண பரிமாற்றத்தால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் இரு ஒப்பந்தங்கள் உலக நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்படி காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டாலும் புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை.
சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்யவும், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக புகார் வழக்கு தாக்கல் செய்வதற்கும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு” என்றார்.
புலன் விசாரணைக்கு முழு அதிகாரம்!
மேலும் அவர், ”அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்றால் சொத்துக்களை மட்டும் தான் முடக்க முடியும். ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான். அமலாக்கத்துறை புலன் விசாரணை மேற்கொள்ள முழு அதிகாரம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே அமலாக்கத்துறை விருப்பம்போல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறுவதை ஏற்க முடியாது” என துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்டு வரும் நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கொடநாடு வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முக்கிய ஆதாரம்!
செந்தில்பாலாஜி வழக்கு: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தைத் தொடங்கினார்!